ஒளிரும் மகிழ்ச்சி கொண்டவர் புனித கிளாரா
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஒளிரும் மகிழ்ச்சி கொண்ட புனித கிளாராவின் முன்மாதிரிகையான வாழ்க்கையைப் பின்பற்றி வாழ முயல்வோம் என்றும், ஆயுதம் இல்லாதவர்களாக தீமையை நாம் நிராயுதபாணியாக்க முடியும் என்றும் தெரிவித்தார் கர்தினால் மத்தேயு சூப்பி
ஆகஸ்டு 11, திங்கள் புனித கிளாரா திருவிழாவை முன்னிட்டு, அசிசியில் உள்ள புனித ருபினோ ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றியபோது இவ்வாறு எடுத்துரைத்தார் போலோஞ்னா உயர் மறைமாவட்டத்தின் பேராயரும், இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் மத்தேயு சூப்பி.
புனித கிளாராவின் எடுத்துக்காட்டான வாழ்க்கையானது கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்லாது, திருஅவைக்கும் முழு உலகத்திற்கும் உதவுகின்ற வாழ்க்கை என்றும், கிறிஸ்துவின் எளிய பெண்ணாக புனித கிளாரா விண்ணகமாட்சிமைக்கு உயரே பறந்துவிட்டார் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் சூப்பி.
நம்மைப் பற்றியும் நாம் வாழ்கின்ற இந்த பூமியைப் பற்றியும் புரிந்துகொள்ள நமது பார்வையை மேல்நோக்கி உயர்த்துவோம் என்று கூறிய கர்தினால் சூப்பி அவர்கள், நாம் அனைவரும் கடவுளின் ஒரே அன்பால் வழிநடத்தப்படுகின்றோம் என்பதை உணர்ந்து வாழ வலியுறுத்தினார்.
மென்மையான மற்றும் உறுதியான மனம் கொண்ட புனித கிளாரா மற்றும் அவருடைய உடன் சகோதரிகளால் நாம் வழிநடத்தப்பட அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்கள் தங்களது உடனிருப்பின் ஒளியுடன் மனிதநேயம், விருந்தோம்பல் மற்றும் செபத்தின் கலங்கரை விளக்கமாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
ஒளிரும் மகிழ்ச்சி கொண்ட புனித கிளாரா போல, எப்போதும் உடன் சகோதரிகளுடனும் சமூகத்துடனும் ஒன்றாக இருந்து சிறக்க வலியுறுத்திய கர்தினால் சூப்பி அவர்கள் சான்றளிக்கும் வல்லமையுடன், உண்மையான, இணக்கமான வாழ்க்கைக் கட்டியெழுப்ப நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் கூறினார்.
புனித கிளாராவின் வாழ்க்கை அமைதியின் பாதையைத் தேர்ந்தெடுக்க நமக்கு உதவுகிறது என்றும், செபம் போரை விட வலிமையானது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது என்றும் எடுத்துரைத்த கர்தினால் சூப்பி அவர்கள், தீமையை எதிர்கொள்ள இறைவனில். நம்மை ஈடுபடுத்தவும் அவரை நெருங்கிப் பின்பற்றவும் நம்மைத் தூண்டுகிறது என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்