MAP

தலைமைத்துவ பணியேற்புத் திருப்பலிக்கு முன் திருத்தந்தை (கோப்புப்படம் 18.05.25) தலைமைத்துவ பணியேற்புத் திருப்பலிக்கு முன் திருத்தந்தை (கோப்புப்படம் 18.05.25)  (@Vatican Media)

2026-ஆம் ஆண்டு உலக அமைதி தினத்திற்கான கருப்பொருள்

ஒருங்கிணைந்த மனித குல மேம்பாட்டிற்கான திருப்பீடத்துறையானது, கடவுளின் அரசைக் கட்டியெழுப்பவும், மனிதாபிமான மற்றும் அமைதியான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவும் ஒன்றிணைந்து செயல்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

“உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக: ஆயுதங்களற்ற அமைதியை நோக்கி” என்பதை 2026-ஆம் ஆண்டு உலக அமைதி தினத்திற்கான கருப்பொருளாக வெளியிட்டுள்ளது ஒருங்கிணைந்த மனிதகுல மேம்பாட்டுக்கான திருப்பீடத்துறை.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் முன் வத்திக்கான் வளாகத்தின் மேல்மாடத்தில் தோன்றியபோது எடுத்துரைத்த ஊர்பி எத் ஓர்பி சிறப்புச் செய்தி கருத்துக்களை முன்னிருத்தி, ஆயுதங்களற்ற அமைதி என்ற கருப்பொருளானது ஒருங்கிணைந்த மனிதகுல மேம்பாட்டுக்கான திருப்பீடத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

வன்முறை மற்றும் போரினை நிராகரித்து, அன்பு மற்றும் நீதியை அடிப்படையாகக் கொண்ட உண்மையான அமைதியைத் தழுவ உலக அமைதி நாளானது மனிதகுலத்தை அழைக்கிறது என்றும், இந்த அமைதியானது ஆயுதங்களற்ற அமைதியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது திருப்பீடத்துறை.

ஆயுதங்களற்ற அமைதியானது பயம், அச்சுறுத்தல்கள் அல்லது ஆயுதங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது என்றும், மோதல்களைத் தீர்க்கும் திறன் கொண்டதாகவும், இதயங்களைத் திறக்கும் ஆற்றல் பெற்றதாகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது திருப்பீடத்துறை.

நல்லிணக்கம், நம்பிக்கை, அக்கறை, பரிவு மற்றும் பற்றுறுதியை உருவாக்கும் திறன் கொண்டதாக அமைதி இருக்க வேண்டும் என்று சுட்டிகாட்டியுள்ள திருப்பீடத்துறையானது, அமைதிக்கு அழைப்பு விடுப்பது போதாது மாறாக, காணக்கூடியதாகவோ அல்லது முறையானதாகவோ இருந்தாலும், எந்த வகையான வன்முறையையும் நிராகரிக்கும் வாழ்க்கை முறையில் நாம் அந்த அமைதியை உள்ளடக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளது.

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வாழ்த்தான, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” (யோவான் 20:19), என்ற இறைவார்த்தையின் வழியாக உலகத்தில் உள்ள மக்கள், நம்பிக்கையாளர்கள், நம்பிக்கையற்றவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் குடிமக்கள் என அனைவருக்கும் எடுத்துரைத்துரைத்துள்ள ஒருங்கிணைந்த மனித குல மேம்பாட்டிற்கான திருப்பீடத்துறையானது, கடவுளின் அரசைக் கட்டியெழுப்பவும், மனிதாபிமான மற்றும் அமைதியான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவும் ஒன்றிணைந்து செயல்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 ஆகஸ்ட் 2025, 13:43