ஆயுதங்களற்ற அமைதியான உலகிற்காக செபிப்போம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
வன்முறை, வெறுப்பு மற்றும் இறப்பு போன்ற சூழ்நிலைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் உலகில் ஆயுதங்களற்ற அமைதியான உலகிற்காக நாம் அனைவரும் செபிப்போம் என்றும், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தியுள்ளது போல ஆகஸ்டு 22 வெள்ளிக்கிழமையை செபம் மற்றும் நோன்பிற்கான நாளாக அனுசரித்து அமைதியான உலகிற்காக அன்னை மரியின் துணையினை நாடுவோம் என்று கூறினார் கர்தினால் மத்தேயோ சூப்பி.
ஆகஸ்டு 21, புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் எடுத்துரைத்த செப விண்ணங்களின்போது பாலஸ்தீனம், உக்ரைன் மற்றும் போரினால் துன்புறும் உலகின் மக்களுக்கு அமைதி மற்றும் நீதி வேண்டி செபிக்க திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தியதை உறுதிப்படுத்தும் வண்ணம் இத்தாலிய ஆயர் பேரவையினருக்கு இவ்வாறு எடுத்துரைத்தார் போலோஞ்னா உயர்மறைமாவட்டத்தின் பேராயரும், இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் மத்தேயு சூப்பி.
அதேபோல், கர்தினால் பால்தோ ரெய்னா திருத்தந்தை வலியுறுத்தும் இச்செப நாளைக் கடைபிடிக்க உரோம் மறைமாவட்ட மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
அமைதி என்பது ஒரு ஆன்மிக கற்பனை அல்ல. ஒரு தாழ்ச்சியான பாதை என்றும், இது அன்றாடச் செயல்களால் ஆனது, பொறுமை துணிவு, கேட்டல், செயல்படுதல் ஆகியவற்றோடுப் பின்னிப் பிணைந்துள்ளது என்றும் கூறியுள்ளார் கர்தினால் சூப்பி.
அமைதியானது எப்போதையும் விட, நமது விழிப்புணர்வையும் உருவாக்கத்தையும் கோருகிறது என்று வலியுறுத்தியுள்ள கர்தினால் சூப்பி அவர்கள், இத்தாலியில் உள்ள அனைத்து தலத்திருஅவைகளில் உள்ளோரும் திருத்தந்தையின் விண்ணப்பத்தினை செய்லபடுத்தும் வகையில் ஆகஸ்டு 22 ஆம் நாளை அமைதி மற்றும் நீதிக்கான செப நாளாக அனுசரிக்கக் கேட்டுக்கொண்டார்.
அமைதியின் அரசியான ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியா, அனைத்து மக்களிடமிருந்தும் போரின் பயங்கரத்தை நீக்கி, அரசியல் மற்றும் இராஜதந்திர பொறுப்புகளைக் கொண்டவர்களின் மனதை ஒளிரச் செய்ய மன்றாடுவோம் என்று வலியுறுத்தியுள்ள கர்தினால் சூப்பி அவர்கள், போரினால் துன்புறும் அனைத்து மக்களின் கண்ணீரை எல்லாம் வல்ல இறைவன் துடைக்க அருள்வேண்டுவோம் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்