மனிதாபிமான நெருக்கடியில் உள்ள காசா மக்கள்
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
உலகம் முழுவதிலுமிருந்து ஒரு மனதாக கண்டனம் எழுந்த போதிலும், காசாவில் அதிகரித்துவரும் மோதல்கள் குறித்து அதிர்ச்சி அடைவதாக கர்தினால் பியத்ரோ பரோலின் தெரிவித்துள்ளார்.
நேபிள்ஸில் நடைபெற்ற 75 ஆவது தேசிய திருவழிபாட்டு வாரத்தின் தொடக்க விழாவில் பேசிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் இவ்வாறு கூறியுள்ளார்.
காசாவின், நகரிலுள்ள நாசர் மருத்துவமனையின் மீதான இஸ்ரேலிய தாக்குதலைக் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், அந்தத் தாக்குதலில் 5 பத்திரிக்கையாளர் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அர்த்தமற்ற இந்தப் போரில் தீர்வுக்கான வாய்ப்பு எதுவும் தெரியவில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மோதல்கள், மேலும் சிக்கலானதாகவும், மனிதாபிமான ரீதியாக மேலும் ஆபத்தானதாகவும் மாறிவருகிறது என்றும் வலியுறுத்தியுள்ளார் கர்தினால் பரோலின்.
மேலும், உக்ரைன் போரை நிறுத்துவதற்கான செயல்முறைகளில், கோட்பாட்டளவில் பல சாத்தியமான தீர்வுகள் மற்றும் அமைதிக்கு வழிவகுக்கும் பல பாதைகள் உள்ளன என்று தெரிவித்த கர்தினால் பரோலின் அவர்கள், இவை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட மிகுந்த அரசியல் முயற்சியும், உள்மனத் தயாரிப்பும் தேவைப்படுகிறது என்றும் உரைத்துள்ளார்.
எதிர்நோக்கை மீண்டும் பெரும் தருணம் என்று இந்த யூபிலி ஆண்டின் கருப்பொருளை அறிவித்த முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளை நினைவு கூர்ந்து, சோர்ந்து போகாமல், நம்பிக்கைக்கான சாத்தியமற்ற நிலையிலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் கர்தினால் பியத்ரோ பரோலின் .
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்