MAP

திருப்பலியின் நிறைவில் அருள்பணியாளர்களுடன் கர்தினால் பரோலின் திருப்பலியின் நிறைவில் அருள்பணியாளர்களுடன் கர்தினால் பரோலின்  

மனைவியர், அன்னையரின் பாதுகாவலராகும் தகுதி பெற்ற புனித மோனிகா

கடவுளின் கண்கள் மற்றும் அன்னையரின் இதயம் ஆகிய இரண்டும் ஒருபோதும் நம்மை கைவிட்டுவிடாது - கர்தினால் பியெத்ரோ பரோலின்

மெரினா ராஜ் - வத்திக்கான்

புனித மோனிகாவின் வாழ்க்கையானது கற்பித்தல் பற்றிய ஓர் உயிருள்ள ஆய்வுக் கட்டுரையாக இருக்கின்றது என்றும், உலகில் உள்ள அனைத்து மனைவிகள் மற்றும் அன்னையர்களின் பாதுகாவலர் என்று அறிவிக்கப்பட தகுதியுள்ளவர் அவர் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

ஆகஸ்டு 27, புதன் தூய மோனிகா திருவிழாவன்று அவரது திரு உடல் வைக்கப்பட்டிருக்கும் உரோமையில் உள்ள புனித அகுஸ்தீன் திருத்தலத்தில் மாலைத் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றியபோது இவ்வாறு எடுத்துரைத்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

புனித மோனிகாவின் பராமரிப்பில் அனைத்து அன்னையர்களையும் குறிப்பாக பிள்ளைகளை இழந்த அன்னையர்களை ஒப்படைத்து செபிப்பதாக எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், பிள்ளைகளால் கவனிக்கப்படாத அன்னையர்கள், சிறையில் இருக்கின்ற, போதைப் பொருள்களால் தங்களது வாழ்வைத் தொலைத்த, போரில் ஈடுபடுகின்ற, உடல் நலமற்ற பிள்ளைகளின் அன்னையர் ஒவ்வொருவருக்காகவும் சிறப்பாக செபிப்பதாகவும் எடுத்துரைத்தார்.

கடவுளின் கண்கள் மற்றும் அன்னையரின் இதயம் ஆகிய இரண்டும் ஒருபோதும் நம்மை கைவிட்டுவிடாது என்ற பழமொழிக்கேற்ப இயேசுவின் தாய் கல்வாரி மலையில் தன் மகனின் அருகில் இருந்தது போல, இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு தாயும் தன் பிள்ளைகளின் அருகில் அவர்களது தேவையின்போது உடனிருக்கின்றார் என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.

16 வயதில் ஒழுங்கற்ற வாழ்க்கையை வாழ்ந்த தூய அகுஸ்தினாருக்காக இறைவனிடம் கண்ணீருடன் தொடர்ந்து செபித்து அவரது மனமாற்றத்திற்கு வழிவகுத்தவர் தூய மோனிகா என்றும், கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்ற இறைவார்த்தைகேற்ப இறைவனிடம் விடாது கேட்டு தனது மன்றாட்டுக்களைப் பெற்றுக்கொண்டவர் தூய மோனிகா என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்.  

கருவில் நம்மை சுமந்து நமக்கு உடலையும் உயிரையும் கொடுத்தது மட்டுமன்று, கிறிஸ்தவ நம்பிக்கையில் நம்மை வளர்த்து, அன்பு, அக்கறை கொண்டு அனுதினமும் நம்மை வளர்த்த நம் அன்னையர்கள் இன்று மண்ணுலகில் இருந்தாலும் விண்ணுலகில் இருந்தாலும் நமக்காக கடவுளின் செபிப்பதை தொடர்ந்து செய்தொகொண்டே இருக்கின்றார்கள் என்றும் தெரிவித்தார் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஆகஸ்ட் 2025, 15:54