இரக்கத்தின் வாக்குறுதியாக நம்மை மாற்றும் புனித கதவாகிய இயேசு
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஆக்குயிலாவில் புனித கதவு திறக்கப்படும் நிகழ்வனது ஓர் உயிருள்ள நினைவாக, கண்ணீருடன் கூடிய செபமாக, விடுதலை மற்றும் இரக்கத்தின் வாக்குறுதியாக மாறுகிறது என்று கூறினார் கர்தினால் பியெத்ரோ பரோலின்..
ஆகஸ்டு 29 வெள்ளிக்கிழமை ஆக்குயிலாவில் திறக்கப்பட்ட புனித கதவு வழிபாட்டின்போது நிறைவேற்றிய திருப்பலியில் ஆற்றிய மறையுரையின்போது இவ்வாறு கூறினார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
1300 ஆம் ஆண்டு, முதல் யூபிலி ஆண்டானது கொண்டாடப்பட்ட இந்த ஆக்குயிலாவில், அப்போதைய திருத்தந்தை எட்டாம் போனிஃபாஸ் அவர்கள் முதல் புனித கதவினைத் திறந்து வைத்தார்.
1294ஆம் ஆண்டு இந்த ஆக்குயிலா மரியன்னை திருத்தலத்தில் திருத்தந்தை புனித ஐந்தாம் செலஸ்டீன் திருத்தந்தையாக முடிசூட்டப்பட்டார். அவர் தலைமைப்பணி ஏற்றவுடனேயே அத்திருத்தலத்தின் புனித கதவு வழியாக நுழைந்து ஆலயத்திற்குள் செல்பவர்களுக்கு நிறைபலன் உண்டு என்று அறிவித்தார்.
அது தொடர்பாக Inter sanctorum solemnia எனப்படும் "மன்னிப்பு அறிக்கை" ஒன்றினையும் மக்களுக்காக வெளியிட்டார். இதன் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் ஆக்குயிலா நகரில், ஆகஸ்ட் 28, 29 ஆகிய நாள்களில் செலஸ்டின் மன்னிப்பு என்ற பெயரில் வழிபாட்டு நிகழ்வுகள் கொண்டாடப்படுகின்றன.
கிறிஸ்துவே நமது யூபிலி ஆண்டின் புனித கதவாக இருக்கின்றார் என்றும், அவரே மீட்பை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார், அவர் வழியாக மட்டுமே நாம் முழு வாழ்வில் நுழைந்து அடிமைத்தனத்திலிருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.
இயேசுவே நமது நம்பிக்கை மற்றும் மன்னிப்பின் கதவு, அவரே நம் வாழ்விற்கான வாயில் மற்றும் வழி என்று எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், இயேசுவின் வாழ்க்கை நமக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்குகின்றது என்றும் அவர் வழியாகவே நாம் மீட்படைகின்றோம் என்றும் கூறினார்.
கிறிஸ்துவைக் கடந்து செல்வது என்பது அவருடைய நற்செய்தியை ஏற்றுக்கொள்வது, அவருடைய குரலால் வழிநடத்தப்பட அனுமதிப்பது, அவருடைய வாழ்க்கை வழியில் நுழைவது என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், புனித கதவு என்பது பார்ப்பதற்கு அல்ல, கடந்து செல்ல வேண்டிய ஒன்று என்றும், எடுத்துரைத்தார்.
இயேசுவின் வழியாக நுழைவது என்பது மீட்பை எதிர்கொள்வது, ஒருவரின் வாழ்க்கையை முழுமையாக உணர்ந்துகொள்வது, கடவுளின் முகத்தைக் கண்டுபிடிப்பது மற்றும் அவருடன் உண்மையான ஒற்றுமையின் மகிழ்ச்சியை அனுபவிப்பது என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், நாம் உண்மையாக வாழ்ந்தால் மட்டுமே யூபிலி உண்மையிலேயே ஓர் அடையாளத்தை நம்மில் விட்டுச்செல்கிறது, இல்லையெனில், அது நம்மை மாற்றாமல் கடந்து செல்லும் மற்றொரு காலமாக மாறும் அபாயம் உள்ளது என்றும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்