ஸ்லோவாக்கியா லிட்மனோவா திருத்தலத்திற்குத் தடையில்லாச் சான்றிதழ்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த 1990 முதல் 1995 வரை ஸ்லோவாக்கியாவின் லிட்மனோவாவில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் அன்னை மரியாவின் தோற்றங்கள் குறித்து Nihil obstat எனப்படும் 'தடையில்லை சான்றிதழை' வழங்கியுள்ளது விசுவாசக் கோட்பாட்டிற்கான திருப்பீடத்துறை
விசுவாசக் கோட்பாட்டிற்கான திருப்பீடத்துறை இந்த ஒப்புதல், இயற்கைக்கு அப்பாற்பட்ட நம்பகத்தன்மையை விட ஆன்மீக பலன்களின் அடிப்படையில் மதிப்பீட்டை அனுமதிக்கும் புதிய விதிமுறைகளைப் பின்பற்றுகிறது என்றும் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஆணை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
பேராயர் Jonáš Jozef Maxim அவர்களின் வேண்டுகோளுக்குப் பதிலளித்துள்ள விசுவாசக் கோட்பாட்டிற்கான திருப்பீடத் துறையின் தலைவர் பேராயர் கர்தினால் Víctor Manuel Fernández அவர்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள், மனமாற்றங்கள் மற்றும் தொடர்ச்சியான திருப்பயணங்கள் உள்ளிட்ட அத்திருத்தலத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை இதன்வழி அங்கீகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அன்னை மரியாவின் இந்தத் தோற்ற நிகழ்வுகள், மனமாற்றம், எளிமை, அமைதி மற்றும் கடவுளின் நிபந்தனையற்ற அன்பை ஊக்குவிக்கும் செய்திகளை வெளிப்படுத்துவதாகவும் அவ்வாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில செய்திகள் ஐயப்பாடானதாகக் காணப்பட்டாலும், அவை இறைவெளிப்பாடுகளிலிருந்து அல்ல, காட்சிப்பெற்றோரின் தனிப்பட்ட விளக்கங்களிலிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ள அதேவேளை, விசுவாசிகளைக் குழப்பக்கூடிய எதையும் தவிர்த்து, செய்திகளை வெளியிட பேராயர் Maxim அவர்களை ஊக்குவித்துள்ளார் கர்தினால் Fernández.
முக்கியமாக, Nihil obstat எனப்படும் தடையில்லை சான்றிதழானது, காட்சிகளின் இயற்கைக்கு அப்பாற்பட்ட தோற்றத்தை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் பொது வழிபாடு மற்றும் திருப்பயணங்களை அனுமதிக்கிறது, விசுவாசிகள் ஆன்மிகச் செய்திகளுடன் பாதுகாப்பாக ஈடுபட முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது என்பதும் அவ்வாணையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்