கொள்கைகள் குடும்பங்கள், தாய்மை, மற்றும் சமத்துவத்தை ஆதரிக்க வேண்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான சமத்துவத்தை மேம்படுத்துவதோடு, குடும்பங்கள், தாய்மை மற்றும் மகப்பேறை ஆதரிக்கும் மற்றும் பாதுகாக்கும் கொள்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும்" என்று கூறினார் பேராயர் Caccia.
ஜூலை 14, 15, திங்கள் மற்றும் செவ்வாயன்று, நியூயார்க் ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில், உயர் நிலை அரசியல் மன்றக் கருத்தரங்கத்தின் போது, நிலையான வளர்ச்சி இலக்கு 3 (SDG 3) மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கு 4 (SDG 4) குறித்த விவாதத்தில் இவ்வாறு தெரிவித்தார் ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Gabriele Caccia.
முதலாவதாக, நிலையான வளர்ச்சி இலக்கு 3 (SDG 3) என்ற தலைப்பில் கீழ்கண்டவற்றை வலியுறுத்தினார் பேராயர் Gabriele.
உடல்நலம் என்பது நோயற்ற நிலை மட்டுமல்ல, உடல், உளவியல், சமூக, ஆன்மிக மற்றும் உணர்வுப்பூர்வமான நல்வாழ்வையும் உள்ளடக்கியது என்று வலியுறுத்திய பேராயர் Caccia அவர்கள், பலவீனமான நலவாழ்வு அமைப்புகள், நிதி பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் தொற்றா நோய்கள் போன்றவற்றை குறித்தும் குறிப்பிட்டார்.
கருத்தியல் அல்லது பொருளாதார செயற்பாட்டுத் திட்டங்கள் நல்வாழ்வுப் பராமரிப்பில் ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பதற்கு எதிராக எச்சரித்தப் பேராயர், உலகளாவிய நலவாழ்வு வசதிகளில் கால் பங்கை இயக்கும் கத்தோலிக்கத் திருஅவை, ஏழ்மையான மற்றும் மிகவும் தொலைதூர சமூகங்களுக்கு சேவை செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இரண்டாவதாக, நிலையான வளர்ச்சி இலக்கு 4 (SDG 4) என்ற தலைப்பில் கீழ்கண்ட கருத்துக்களை வலியுறுத்தினார்.
உண்மையான பாலின சமத்துவம் ஒவ்வொரு நபரின் உள்ளார்ந்த மற்றும் சமமான மனித மாண்பில் வேரூன்றியுள்ளது என்று கூறிய பேராயர் காச்சா அவர்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கல்வி, உடல்நலம், ஒழுக்கமான வேலை மற்றும் சமூகத்தில் முழு பங்கேற்பைப் பெறுவதில் சமமான மனித மாண்பு பிரதிபலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அர்த்தமுள்ள சமத்துவத்தை அடைய வறுமை, வன்முறை மற்றும் ஒதுக்குமுறையைக் கையாள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பேராயர் காச்சா அவர்கள், பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதோடு, குடும்பங்கள், தாய்மை மற்றும் மகப்பேறைப் பாதுகாக்க கொள்கைகள் இருக்க வேண்டும் என்றும் எடுத்துக்காட்டினார்.
இறுதியாக, 2030-ஆம் ஆண்டுக்கு முந்தைய இறுதி ஆண்டுகளில், ஒவ்வொரு பெண் மற்றும் சிறுமியின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்குப் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பை வலியுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார் பேராயர் காச்சா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்