MAP

பேராயர் கபிரியேலே காச்சா பேராயர் கபிரியேலே காச்சா 

உலக வளர்ச்சி அனைவரின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்

ஐக்கிய நாடுகள் சபைக்கான திருப்பீட பேராயர் கபிரியேலே காச்சா அவர்கள், ஸ்பெயினின் செவிலேவில் நடைபெற்ற நிதி மேம்பாடு குறித்த மாநாட்டில் உரையாற்றுகையில், ஒவ்வொரு மனிதனின் கண்ணியத்தையும் நிலைநிறுத்தி, மிகவும் தேவைப்படுபவர்களின் வளர்ச்சியை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்

ஐ.நா.வுக்கான, அண்மையில் நடந்த  உலகளாவிய  நிதி உதவித் தொகைகள் குறைப்புகளுக்குப் பிறகு, வளர்ச்சிக்கான அணுகுமுறைகளைப் பற்றி விவாதிக்கும்பொழுது பொருளாதார அளவீடுகள் அல்லது நிதி அமைப்புகளுக்கு அப்பால் அதன் எல்லைகளைத் தாண்டிச் சிந்திப்பது முக்கியம் என வலியுறுத்தினார் பேராயர் கபிரியேலே காச்சா.

ஸ்பெயினின் செவிலேவில் நடந்த நிதி மேம்பாடு குறித்த மாநாட்டில் பேசிய, ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் காச்சா அவர்கள், உலகத் தலைவர்களின்  முன்னுரிமைகளை மறுபரிசீலனைச் செய்யவும், ஒற்றுமையுடன் செயல்படவும், அனைத்து மக்களையும் மேம்படுத்தும் வகையில் உலகளாவிய அமைப்புகளை சரிசெய்யவும் அழைப்பு விடுத்தார்.

அண்மையில் இடம்பெற்ற  நிதி உதவித் தொகை குறைப்புகளால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக பேசிய பேராயர், வளர்ச்சி என்பது பொருளாதாரத்துக்கு சேவை செய்வது அல்ல, மாறாக  ஒவ்வொரு மனிதருக்கும் கடவுள் கொடுத்துள்ள கண்ணியத்தை மையமாக கொண்டது எனவும், அதை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும்  எடுத்துரைத்தார்.

பல்வேறு பொருளாதாரக் குறியீடுகள் வழியாக உலகளாவிய வளர்ச்சி  பல ஆண்டுகளாக அளக்கப்பட்டுள்ளது என்றும், இப்போது முன்னுரிமைகளை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், வளர்ச்சி  என்பது அனைவரின் நலனுக்காகவும், குறிப்பாக ஏழைகள் மற்றும் மிகவும் தேவைப்படுவோருக்காகவும், நீதியையும், ஒற்றுமையையும் சமாதானத்தையும் ஊக்குவிக்கும் வகையில் அமையவேண்டும் என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள்  கூறியதுபோல், உலகளவில்  சமத்துவம் இல்லாத நிலையை சரிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதையும்   திருப்பீடப் பிரதிநிதி நினைவூட்டினார்.

தற்போதைய உலகளாவிய  நிதி அமைப்புகள் நவீன சிந்தனையுடையவை அல்ல என்றும்,  அவை தற்போதைய உலகப் பிரச்சினைகளை திறம்பட தீர்க்க முடியாதவை  என்றும், அவை சீரமைக்கப்பட வேண்டியதன்  அவசியத்தையும் திருப்பீடம்  வலியுறுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் பேராயர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 ஜூலை 2025, 15:03