MAP

இஸ்ராயேல் தாக்குதலுக்கு உள்ளான பாலஸ்தீன கல்விக்கூடம் இஸ்ராயேல் தாக்குதலுக்கு உள்ளான பாலஸ்தீன கல்விக்கூடம் 

காசா மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட காரித்தாஸ் அழைப்பு

காசாவின் நல ஆதரவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இஸ்ராயேல் தாக்குதல்களால் 57,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 11,000 பேர் காணாமல் போயுள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

எண்ணற்ற குழந்தைகள் உட்பட பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் காசா பகுதி மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

160 அரசு சாரா அமைப்புக்களுடன் இணைந்து போர் நிறுத்தத்திற்கான இந்த விண்ணப்பத்தை விடுத்துள்ள பன்னாட்டு காரித்தாஸ் அமைப்பு, இதற்கு பொறுப்புடைய பன்னாட்டு தலைவர்கள், மனிதாபிமான சட்டங்கள் மற்றும் மனிதகுல மாண்புக்கான கொள்கைகளை உயர்த்திப் பிடித்து செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் ஏழைகளின் பக்கம் நின்று, பிறரன்பு மற்றும் நீதிக்காக உழைத்துவரும் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு, ஒழுக்க ரீதியுடன் கூடிய பன்னாட்டுத் தலைவர்களின் அவசர நடவடிக்கையைச் சார்ந்தே காசா மக்களின் வருங்காலம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

அண்மை வாரங்களில் இஸ்ராயேலின் தொடர் தாக்குதலால் 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர், ஏறக்குறைய 4000 பேர் காயமுற்றுள்ளனர் என்பதும், இவர்கள் அனைவரும் உணவு விநியோகத்தைப் பெறுவதற்காக காத்திருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Gaza Strip பகுதி அழிவுக்குள்ளாகி வருவதாலும், அப்பகுதிக்கான உணவு உதவிகள் தடைச் செய்யப்பட்டிருப்பதாலும் பல மணி நேரங்கள் நடந்துச் சென்று உணவைப் பெறும் நிலையிலிருக்கும் மக்கள் இவ்வாறு உணவைத் தேடி அலையும் வேளைகளில் குண்டு வீச்சுக்களால் மடிவதாகவும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

காசாவின் நல ஆதரவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இஸ்ராயேல் தாக்குதல்களால் 57,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 11,000 பேர் காணாமல் போயுள்ளனர். இந்த தாக்குதல் துவங்கியப் பின்னர் காசா பகுதியில் பிறந்த குழந்தைகளுள் எண்ணற்றோர் மோதலாலும், பசியாலும், நல ஆதரவு வசதிகளின்றியும், காயங்களாலும் உயிரிழந்துள்ளனர்.

இது தவிர, 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கட்டாயமாக குடிபெயர வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 ஜூலை 2025, 15:27