ஆயர் மன்றங்களின் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான அழைப்பு
சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்
இவ்வாண்டு நவம்பர் 10 முதல் 21- ஆம் தேதி வரை பிரேசிலின் பெலெமில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் COP30 காலநிலை மாற்ற மாநாட்டில் "வானிலை நீதி மற்றும் பொதுவுடமைக்கான அழைப்பு, பசுமை மாற்றம், மாற்றத்திற்கான மற்றும் போலியான தீர்வுகளுக்கு எதிர்ப்பு” என்ற தலைப்பில் ஒரு கூட்டு ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 1-ஆம் தேதி திருப்பீட பத்திரிகை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுக்கு இந்த ஆவணம் வழங்கப்பட்டுள்ளது என்றும், இது காலநிலை நீதிக்கான திருஅவையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதோடு, ஒருங்கிணைந்த சூழலியலை ஊக்குவிப்பதற்காக அனைத்து நாடுகளையும் அரசுகளையும் நடவடிக்கை எடுக்க அழைப்பதாகவும் குறிப்பிடுகிறது திருப்பீடம்.
கோடிக்கணக்கான மக்கள் ஏற்கனவே காலநிலை மாற்றத்தின் பேரழிவுகளை அனுபவித்து வருகின்றனர் என்றும், புயல்கள், கட்டாய இடம்பெயர்வு, தீவுகள் இழப்பு, ஆறுகள் மாசுபடுதல் ஆகியவை மேலும் இந்த கிரகத்தை ஒரு நுகர்வுப் பொருளாகக் கருதி விழுங்க முயலும் முறைமையை எதிர்கொண்டு, மனச்சாட்சிக்கு அழைப்புவிடுவதாக இந்தியாவின் கோவா மற்றும் டாமன் மறைமாவட்ட பேராயரும், ஆசிய ஆயர்கள் மாமன்றத்தின் (FABC) தலைவருமான கர்தினால் ஃபிலிப் நேரி ஃபெராவோ கூறியதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரேசிலின் போர்டோ அலெக்ரே மறைமாவட்ட ஆயரும், பிரேசிலிய ஆயர்கள் பேரவை (CNBB) மற்றும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய மறைமாவட்டக் குழுவின் (CELAM) தலைவருமான கர்தினால் ஜெய்மி ஸ்பென்க்லர், காங்கோ ஜனநாயகக் குடியரசின் கின்ஷாசா மறைமாவட்ட ஆயரும், ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவையின் (SECAM) தலைவருமான கர்தினால் ஃபிரிடோலின் அம்பொங்கோ பெஸுங்கு, திருத்தந்தையின் இலத்தீன் அமெரிக்க ஆணைக்குழுவின் செயலரான எம்லிஸ் குடா ஆகியோரும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது உடனிருந்தனர்.
அமேசானிலிருந்து ஆப்பிரிக்கா வரை, திருஅவை அதன் குரலை எழுப்புகிறது எனவும், நிலத்திற்காக மறைசாட்சிகளான அமேசானிய மக்களின் சார்பாக குரலை எழுப்புகிறேன் எனவும், பழங்குடி, ஆப்பிரிக்க-வம்சாவளி, விவசாயிகள் மற்றும் நகர்ப்புற சமூகங்களின் வாழ்க்கை முறை, உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவற்றில் மாற்றங்களின் தேவை எனவும் கர்தினால் ஸ்பெங்லர் இச்சந்திப்பின்போது எடுத்துரைத்தார்.
அதேவேளை, கர்தினால் அம்போங்கோ அவர்கள், ஆப்பிரிக்க கண்டத்தின் தலத்திருஅவைகளின் சார்பாக தனது நிலைப்பாட்டை எடுத்துரைத்தபோது, அனைத்து மனிதகுலத்திற்கும் நீதி மற்றும் அமைதியின் எதிர்காலத்திற்கு ஆப்பிரிக்கா பங்களிக்க விரும்புகிறது என்றும், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்