திருப்பீடத்தின் இடையறாத பிறரன்புப் பணிகள்
ஜெர்சிலின் டிக்ரோஸ் -வத்திக்கான்
திருஅவையில் திருத்தந்தை இயற்கை எய்தி திருப்பீடத் தலைமைப் பதவி காலியாக இருந்த இருந் நாட்களிலும் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரேனிய மக்களுக்கு பிறரன்பு உதவிகள் செய்யப்பட்டு வந்தன என்று திருத்தந்தையின் பிறரன்பு நடவடிக்கைகளுக்கான பொறுப்பாளர் கர்தினால் Konrad Krajewski தெரிவித்துள்ளார்.
உக்ரேனிய மக்களுக்கு நீண்ட காலமாக ஆதரவு வழங்கி வரும் உரோமை நகரின் புனித சோபியா பேராலயத்திலிருந்து உதவிப் பொருட்கள் ஏற்றப்பட்ட கனரக வாகனம் ஒன்று சில நாட்களுக்கு முன் புறப்பட்டதாகவும், இரக்கம் ஒருபோதும் நிறுத்தப்படாது என்றும் கர்தினால் கூறியுள்ளார்.
துன்புறுத்தப்பட்ட நாடு என்ற மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளை தற்போதைய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் விவரித்ததை எடுத்துரைத்து உக்ரைன் நாடு எப்போதும் திருஅவையின் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் கர்தினால்.
உக்ரைனில் போர் தொடங்கிய நாளிலிருந்து உரோமையில் உள்ள புனித சோபியா பேராலயம், உக்ரேனிய சமூகத்தின் ஆன்மிக மையமாகவும், ஒன்றிப்பின் தளமாகவும் இயங்கி வருகிறது என்றும், அப்போஸ்தலிக்க பிறரன்புப் பணிகளின் அலுவலகமும் தாராளமாக தனது பங்களிப்பை வழங்கி, வத்திக்கானில் சேமித்து வைக்கப்பட்ட பொருட்களை அனுப்பி வருகிறது என்றும் கர்தினால் கூறியுள்ளார்.
உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட உதவிப் பொருட்களில் மெத்தைகள், உணவுப் பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான அத்தியாவசியப் பொருட்களும் உள்ளன என்பதையும், தற்போது மோசமடைந்து வரும் அந்நாட்டின் நிலையையும் சுட்டிக்காட்டியுள்ளார் கர்தினால்.
துன்பங்களும் அவசரத் தேவைகளும் நிறைந்த இந்த தருணத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், நம்பிக்கை மற்றும் ஒன்றிப்பை நிலைநிறுத்தி உக்ரேனிய மக்களுக்கு தனது இரக்கத்தின் பணியைத் தொடர்ந்து வருகிறார் என்றும், துயர் நிறைந்த இடத்தில் ஆறுதலையும், பேரழிவு நிறைந்த இடத்தில் இரக்கத்தையும் திருஅவை வழங்கி வருகிறது என்றும் கர்தினால் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்