MAP

ஒசாக்கோ கருத்தரங்கில் கர்தினால் பரோலின் ஒசாக்கோ கருத்தரங்கில் கர்தினால் பரோலின் 

80 ஆண்டுகளான திருப்பீடம், ஜப்பானுக்கு இடையேயான உறவுகள்

உண்மையான அழகு இதயத்தின் காயங்களுக்கு மருந்தாகவும், மனிதர்களை ஒன்றிணைக்கும் பொதுவான மொழியாகவும் செயல்படுவதோடு, மனித நேய செயல்களிலும் வெளிப்பட்டு, அமைதி மற்றும் ஒன்றிப்பிற்கான வழிகளையும் திறக்கிறது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

80 ஆண்டுகளுக்கு மேலாக நிலவிவரும் திருப்பீடம் மற்றும் ஜப்பான் நாட்டிற்கு இடையேயான உறவுகள், பல பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டவை என்று ஜப்பானின் ஒசாக்கோவில் நடைபெற்ற  EXPO 2025 கூட்டத்தில், திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களின் சார்பாக கலந்து கொண்டு உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் தெரிவித்துள்ளார்.

1555 ஆம் ஆண்டில் திருத்தந்தை நான்காம் பவுல் அவர்கள்,  காகோஷிமாவைச் சேர்ந்த பெர்னார்டோவுக்கு அளித்த நேர்காணலின் 470வது ஆண்டு நினைவு, Ambasceria Tenshō எனப்படும் ஐரோப்பாவின் முதல் ஜப்பானிய  தூதர்க்குழு திருத்தந்தை 13ஆம் கிரகோரி  அவர்களைச் சந்தித்ததன் 440 வது ஆண்டு நினைவு, மேலும் Keichō  தூதர்க்குழு  1615 ஆம் ஆண்டு திருத்தந்தை 5ஆம்  பவுல் அவர்களைச் சந்தித்ததின் 410 வது ஆண்டு நினைவு போன்ற வரலாற்று நிகழ்வுகளை இந்த 2025 ஆம் ஆண்டு நினைவுபடுத்துகின்றன என்றும் கூறியுள்ளார் கர்தினால் பரோலின்.

திருப்பீடம் இவ்விழாவில் அழகு மற்றும் நம்பிக்கை எனும் இரண்டு முக்கியமான கருத்தியல்களை முன்வைக்கிறது என்றும், அழகு என்பது உண்மையின் மகிமை என்றும், இவ்வழகியல் உணர்வு, முழுமை, நீதி மற்றும் நம்பகத்தன்மைக்கான தேடலை ஊக்குவிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும் இவ்வழகியல் உணர்வினால் ஈர்க்கப்படுபவர்கள்,  தங்கள் ஆன்மாக்களை நல்லிணக்கம், ஒழுங்கு மற்றும் அமைதியை நோக்கி உயர்த்த தூண்டப்படுகிறார்கள் என்றும் கர்தினால் பரோலின் தெரிவித்துள்ளார்.

உண்மையான இந்த அழகு இதயத்தின் காயங்களுக்கு மருந்தாகவும், மனிதர்களை ஒன்றிணைக்கும் பொதுவான மொழியாகவும் செயல்படுவதோடு, மனித நேய செயல்களிலும் வெளிப்பட்டு அமைதி மற்றும் ஒன்றிப்பிற்கான வழிகளையும் திறக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் கர்தினால்.

அழகுடன் நெருக்கமாகத் தொடர்புடையது நம்பிக்கை என்றும், கிறிஸ்தவர்கள் என்னும் முறையில் இது இறைநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், நம்பிக்கை என்பது வெறும் தனிப்பட்ட வெற்றியை விரும்புவது அல்ல; அது பொதுநலனுக்கான உறுதியான முயற்சியாக மாறுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவருடனான பொறுப்புணர்வை இந்த நம்பிக்கை உருவாக்குகிறது என்றும், கஷ்டங்களை வெல்லும் திறனை வளர்த்தெடுக்கவும் தூண்டுகிறது  என்றும் கூறியுள்ளார் கர்தினால். 

மேலும், முரண்பாடுகள் தீர்க்க முடியாதவையாகத் தெரிந்தாலும் கூட, இந்த  நம்பிக்கையானது  உரையாடல் மற்றும் ஒத்துழைப்பிற்கான அழைப்பாக உள்ளது என்று மேலும் கூறியுள்ளார் திருப்பீடச் செயலர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஜூன் 2025, 14:10