MAP

புனித பேதுரு பெருங்கோவில் வளாகம் புனித பேதுரு பெருங்கோவில் வளாகம்   (ANSA)

உரோமையில் கத்தோலிக்க இயக்கங்களுக்கான யூபிலி விழா!

ஜூன் 7,8 ஆகிய தேதிகளில் உரோமை நகரில் நடைபெறவுள்ள கத்தோலிக்க இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் புதிய சமூகங்களுக்கான யூபிலி விழா நிகழ்வில் 70,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

ஜூன் 7,8 ஆகிய தேதிகளில் உரோமை நகரில்  இடம்பெறவுள்ள கத்தோலிக்க இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் புதிய சமூகங்களுக்கான  யூபிலி விழா  நிகழ்வில் 70,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும்,  இந்நிகழ்வு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களால் நிறைவேற்றப்படும் பெந்தக்கோஸ்து ஞாயிறு திருப்பலியுடன் நிறைவடையும் என்றும் செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், போர்ச்சுக்கல், போலந்து, ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, பிரேசில், அர்ஜென்டினா, பெரு, கொலம்பியா, இங்கிலாந்து, பிலிப்பீன்ஸ், எத்தியோப்பியா போன்ற 100-க்கும் மேற்பட்ட  நாடுகளிலிருந்து பெரிய அளவில் குழுக்களாக உரோமை நகருக்குத் திருப்பயணிகள் வருவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஜூன் 7, சனிக்கிழமையன்று, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திருப்பயணிகள் பாப்பிறை பெருங்கோவில்களின் புனிதக் கதவுகளின் வழியாகத் திருப்பயணம் மேற்கொள்வார்கள் என்றும், அன்று மாலை 4 மணிக்கு அவர்கள்  அனைவரும் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ஒன்று கூடி திருத்தந்தையுடன் திருவிழிப்புத் தயாரிப்பு வழிபாட்டில் பங்குபெறுவார்கள் என்றும் அச்செய்தி உரைக்கிறது.

அன்று மாலை 6 மணிக்கு ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் வரும் கத்தோலிக்க இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும், இந்நிகழ்வு, திருவிழிப்புத் தயாரிப்பு வழிபாட்டில் பக்தியுடன் பங்குபெறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேவேளை, இந்நிகழ்வில் 130 பேர் கொண்ட இசைக்குழுவின் பாடல்கள் இசைக்கப்படுவதுடன், நம்பிக்கையாளர் சிலரின் சாட்சியங்களும் பகிரப்படவுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அன்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை திருத்தந்தை அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்தப் பெந்தக்கோஸ்து திருவிழிப்புத் தயாரிப்பு வழிபாட்டில்  இறைவார்த்தை வழிபாடு, திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்தல் மற்றும் திருத்தந்தையின் மறையுரை இடம்பெறும் என்றும் உரைக்கப்பட்டுள்ளது.

ஜூன் 8 ஞாயிறன்று காலை 10.30 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், திருத்தந்தை அவர்களால் நிறைவேற்றப்படும் பெந்தக்கோஸ்து பெருவிழாத் திருப்பலியுடன் இயக்கங்களுக்கான யூபிலி விழா நிறைவடையும் என்றும், இந்தத் திருப்பலி அனுமதிச் சீட்டுகளின்றி அனைவரும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 ஜூன் 2025, 14:37