கடலில் பணியாற்றுபவர்கள் மாண்புள்ள வாழ்க்கையை வாழ வேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
எதிர்நோக்கின் திருப்பயணிகளாக வாழ இந்த 2025-ஆம் ஆண்டு யூபிலியானது அழைப்பு விடுப்பது போல, கடலில் பணியாற்றும் ஒவ்வொரு மனிதனும், எந்த மத நம்பிக்கையைச் சேர்ந்தவராக இருந்தாலும், பணி, பரிமாற்றம், சந்திப்புகள் வழியாக மாண்புள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார் கர்தினால் செர்னி.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் கடல் ஞாயிறு தினத்தையொட்டி, ஜூன் 28, சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மைக்கேல் செர்னி.
ஒருங்கிணைந்த மனித வளர்ச்சி என்பது அனைத்து மனிதர்களையும் அவர்களின் அனைத்து உடல், ஆன்மிக மற்றும் சமூக பரிமாணங்களையும் உள்ளடக்கியது என்றும், நற்செய்தி அறிவிக்கப்பட்டு, உயிர்த்தெழுந்த இயேசுவின் அருகிருப்பு வரவேற்கப்படும் எல்லா இடங்களும், பாவத்தையும் இறப்பையும் வென்ற இயேசுவின் “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்ற வாக்கின்படி புதிதாக எல்லாம் மாறும் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் செர்னி.
கிறிஸ்தவர்கள் அறிவிக்கும் புதுமைத்தன்மையானது, ஏற்கனவே உள்ள ஒழுங்கை இன்னும் தீவிரமாக கேள்விக்குள்ளாக்க வேண்டும், என்றும், ஏனெனில் கடவுளின் அரசு நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறது, அடிமை விலங்குகளை உடைத்தல், கடன்களை மன்னித்தல், வளங்களை மறுபகிர்வு செய்தல், அமைதியில் சந்தித்தல் ஆகியவை துணிவுள்ள அடையக்கூடிய மனித செய்கைகள் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் செர்னி
துறைமுகங்களிலும் கப்பல்களிலும் மக்கள் எவ்வாறு பணியாற்றுகின்றார்கள் அவர்களுக்குரிய உரிமைகள், பாதுகாப்பு நிலைமைகள் என்ன பொருள் மற்றும் ஆன்மீக உதவிகள் என்ன என்பதை முழு திருஅவையும் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கர்தினால் செர்னி அவர்கள், காயம்பட்ட இயற்கை, மோதல்களும் ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்து வரும் உலகில், வாழ்வின் கடவுளை அன்பு செய்வது நம்மை நமது வாழ்க்கையுடன் ஈடுபடுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் கர்தினால் செர்னி.
வாழ்க்கைப் பயணத்திற்குள் பயணிக்கும் மக்களாகிய நாம் 'நம்பிக்கை' என்ற வார்த்தைகளைத் நமது வாழ்வின் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும் என்றும், நாம் அனைவரும் சகோதர சகோதரிகள், ஒரே இல்லத்திலிருந்து புறப்பட்டு அதே இல்லத்திற்குத் திரும்புபவர்கள், என்ற உணர்வோடு வாழவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் கர்தினால் செர்னி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்