MAP

திருத்தந்தையுடன் கர்தினால் பரோலின் திருத்தந்தையுடன் கர்தினால் பரோலின்  (ANSA)

நற்செய்தியின் ஒளியில் அமைதியை விதைப்பவர்களாக!

இன்றைய உலகில் திருப்பீடத் தூதுவர்கள் மனத்தாழ்மை, நற்செய்தியின் மீது பற்றார்வம் மற்றும் நல்லிணக்கம் கொண்ட மனிதர்களாகத் திகழ வேண்டும்: கர்தினால் பியத்ரோ பரோலின்.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

திருஅவையைத் திருத்தந்தையுடனும், உலகின் அரசுகளுடனும், உலகின் காயங்களை நற்செய்தியின் நம்பிக்கையுடனும் இணைக்கும் பாலங்களாகத் திருப்பீடத் தூதர்கள் செயல்படுகிறார்கள் என்றும், யூபிலி விழா மற்றும் நிகழவிருக்கும் திருத்தந்தையுடனான திருப்பீட பிரதிநிதிகள்  சந்திப்பு குறித்தும் நேர்காணல் ஒன்றில் செய்தி அளித்துள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

திருப்பீடப் பிரதிநிதிகள் நற்செய்தியின் விழுமியங்களைச் சுமப்பவர்களாகவும், அமைதியை விதைப்பவர்களாகவும், இடைநிலையாளர்களாகவும் செயல்பட்டு  உரையாடல்கள் மேற்கொள்வதை தங்களது கடமையாகக் கொண்டவர்களாக திகழ வேண்டும் என்றும் கூறியுள்ளார் கர்தினால்.

திருஅவையின் இந்த யூபிலி ஆண்டு திருப்பயணிகளாக வாழும்  திருப்பீட பிரதிநிதிகளுக்கும் கூட ஒன்றிப்பிற்கான ஒரு முக்கியமான தருணத்தை அளிக்கிறது என்றும் கூறியதுடன் கர்தினால் அவர்கள், உலகம் முழுவதும் பரவி ஒன்றுபட்டுள்ள திருஅவை என்னும் குடும்பம் யூபிலியை முன்னிட்டு  திருத்தந்தையின் அருகாமைக்காக உரோமை நகரில் ஒன்றுகூடுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

திருப்பீடத் தூதர்கள், அரசுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் திருத்தந்தையின் பிரதிநிதிகளாகச் செயல்படுவதன் வழியாக திருத்தூதுப் பணியை செய்கின்றனர் என்றும், அவர்கள் அரசுகளுடனான உரையாடல் மற்றும் பிளவுகளை நிவர்த்தி செய்தல், நற்செய்தியின் ஒளியில் ,அமைதி, நீதி, மதச் சுதந்திரம் போன்றவற்றை மேம்படுத்துதல் ஆகிய பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார் கர்தினால் பரோலின்.

மேலும், இன்றைய உலகில் திருப்பீடத் தூதுவர்கள் மனத்தாழ்மை, நற்செய்தியின் மீது பற்றார்வம் மற்றும் நல்லிணக்கம் கொண்ட மனிதர்களாக திகழ வேண்டும் என்றும், வெறுப்பு மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட இவ்வுலகில் அவநம்பிக்கையில் விழும் அபாயம் உள்ள நிலையிலும் கிறிஸ்துவின் அருளில் நம்பிக்கை வைப்பது, மற்றும், நற்செய்தியின் தூதுவர்களாக  உலகின் எல்லாப்பகுதிகளுக்கும் கிறிஸ்துவின் ஒளியைக் கொண்டு செல்லும் பொறுப்புடையவர்களாக செயல்படுவது, உண்மை, நீதி மற்றும் அமைதியில் வேரூன்றிய ஓர் உலகத்தைக் கட்டியெழுப்ப திருத்தந்தை மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 ஜூன் 2025, 15:18