புதிய தோற்றத்தில் திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்!
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
மே 29, வியாழக்கிழமையன்று, திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான Vatican.va மாற்றியமைக்கப்பட்டு திருத்தந்தை மற்றும் திருஅவையின் படிப்பினைகளை எளிதில் அணுகக்கூடிய முறையில் புதிய மற்றும் நவீன வடிவமைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது எனத் திருப்பீடத் தகவல்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
திருத்தந்தையின் அதிகாரப்பூர்வமான படிப்பினைகள் மற்றும் கத்தோலிக்கத் திருஅவையின் உள்ளார்ந்த அமைப்புகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு மிக அருகில் கொண்டுவர முயல்வதே இந்த இணையதளத்தின் நோக்கம் என்றும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருப்பீடத்தின் இந்தப் புதிய முகப்புப் பக்கம் தெளிவான மற்றும் பார்வையாளர்கள் எளிதாக அணுகக்கூடிய அனுபவத்தை வழங்கும் வகையிலும், திருத்தந்தை பதினான்காம் லியோ மற்றும் முந்தைய திருத்தந்தையர்களின் படிப்பினைகள் குறித்த ஆவணங்களை எளிதில் அணுகக் கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது திருப்பீடத் தகவல்தொடர்புத் துறை.
இந்தப் புதிய முகப்புப் பக்கம், 1995-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இணையவழியில் இயங்கிவரும் திருப்பீட இணையதளத்தின் பெரிய வரலாற்றுப் பாரம்பரியத்தை புதிய வடிவத்தில் மாற்றும் பல கட்டங்களால் ஆன வளர்ச்சி மற்றும் திருஅவை ஆசிரிய பணிகளின் ஒரு பகுதியாகும் என்றும் உரைத்துள்ளது.
இப்புதிய இணையதளக் கட்டமைப்பை உருவாக்க ஆவணக்குழு, தகவல் தொழில்நுட்ப குழு, எனப் பல்வேறு திறமைகளைக் கொண்ட குழுக்கள் இணைந்து பணியாற்றியுள்ளன என்றும் எடுத்துரைத்துள்ளது.
சிறப்பாக, பெரு நாட்டை சேர்ந்த வரைகலை வடிவமைப்பாளர் ஜுவான் கார்லோஸ் இடோ அவர்கள் இந்தத் திட்டத்திற்கு உயிரூட்டினார் என்றும், இவர் திருப்பீடத் தகவல் தொடர்புத் துறையினால் நடத்தப்படும் "டிஜிட்டல் உலகில் நம்பிக்கை தொடர்பு" என்ற திட்டத்தின் முதல் குழுவைச் சேர்ந்த முன்னாள் மாணவர் என்றும் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்