MAP

திருத்தந்தையர் அறக்கட்டளை வழி உதவி பெறும் மாணவர்களுடன் கர்தினால் டோலன் திருத்தந்தையர் அறக்கட்டளை வழி உதவி பெறும் மாணவர்களுடன் கர்தினால் டோலன் 

‘திருத்தந்தையர் அறக்கட்டளை’யின் 1 கோடியே 40 இலட்சம் டாலர் உதவி

சுத்தக் குடிநீர் கிடைப்பதை உறுதிச் செய்வது, கல்விக்கூடங்களையும் நல ஆதரவு அமைப்புக்களையும் நிறுவுவது, முதிய அருள்பணியாளர்களை பராமரிப்பது போன்றவை ‘திருத்தந்தையர் அறக்கட்டளை’யின் நோக்கம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து செயல்படும் ‘திருத்தந்தையர் அறக்கட்டளை’ என்ற பிறரன்பு அமைப்பு, 60 நாடுகளின் 116 உதவித் திட்டங்களுக்கென 1 கோடியே 40 இலட்சம் டாலர்களை ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

தான் துவக்கப்பட்ட நாளிலிருந்து திருத்தந்தையர்கள் புனித இரண்டாம் ஜான் பால், 16ஆம் பெனடிக்ட் மற்றும் பிரான்சிஸ் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட திட்டங்களுக்கென இதுவரை 25 கோடி டாலர்களை ஒதுக்கி 2800 திட்டங்களை நிறைவேற்றியுள்ள இந்த அறக்கட்டளை, வளரும் நாடுகளுக்கென இத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

வத்திக்கானால் அடையாளப்படுத்தப்பட்ட நிவாரணத் திட்டங்களுக்கென 1 கோடி டாலர்களும், மறைப்பணித்தளங்களின் அவசர கால உதவிகளுக்கென 40 இலட்சம் டாலர்களும் வழங்கவுள்ளதாக ‘திருத்தந்தையர் அறக்கட்டளை’ அறிவித்தது.

இவ்வுதவித் திட்டங்கள் மக்களுக்கு சுத்தக் குடிநீர் கிடைப்பதை உறுதிச் செய்வது, கல்விக்கூடங்களை நிறுவுவது மற்றும் புதுப்பிப்பது, கோவில்கள் மற்றும் குருத்துவ பயிற்சி இல்லங்களை சீரமைப்பது, நலஆதரவு அமைப்புக்களை கட்டியெழுப்புவது, முதிய அருள்பணியாளர்களை பராமரிப்பது போன்றவைகளை நோக்கமாகக் கொண்டிருக்கும்.

இவ்வாறு உதவித் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றிவரும் ‘திருத்தந்தையர் அறக்கட்டளை’ ஒவ்வோர் ஆண்டும் 100 அருள்பணியாளர்கள், அருள்கன்னியர், அருள்பணி பயிற்சி மாணவர்கள் ஆகியோரின் கல்விக்கென எட்டு இலட்சம் டாலர்களை வழங்கிவருகிறது.

உரோம் நகரில் பயிலும் திருஅவைப் பணியாளர்களுக்கென புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் அவர்களின் பெயரிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 மே 2025, 16:24