மனித உரிமை மீறல்கள் அவமானத்தின் அடையாளம் – பேராயர் காச்சா
மெரினா ராஜ் - வத்திக்கான்
மிகவுல் பலவீனமான மனிதர்களுக்கு எதிரான வன்முறைகள் மனித உரிமை மீறல்கள் மனித குலத்திற்கான துயரமாக, அவமானமாக இருக்கின்றன என்றும், மனிதர்கள் ஒருபோதும் சேதப்படுத்தப்படும் பொருளாகவோ, விற்கப்படும் ஒன்றாகவோக் கருதப்படக்கூடாது என்றும் கூறினார் பேராயர் கபிரியேலே காச்சா.
மே 22, வியாழன் அன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நியுயார்க்கில் நடைபெற்ற "ஆயுத மோதலில் பொதுமக்களின் பாதுகாப்பு" குறித்து தனது கருத்துக்களை எடுத்துரைத்தபோது இவ்வாறு கூறினார் ஐ.நா.விற்கானத் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் கபிரியேலே காச்சா.
பெண்கள், குழந்தைகள், மனிதாபிமான பணியாளர்கள் உட்பட பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைத்து தாக்குதல் நடத்துதல், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பை அழித்தல், அவசர தேவையில் உள்ளவர்களுக்கு மனிதாபிமான அணுகல் மறுக்கப்படுதல் ஆகியவை மிகுந்த வருத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்தக்கூடியது என்றும், இத்தகைய அத்துமீறல்கள் மனித குலத்திற்கான துயரமாக இருக்கின்றன என்றும் எடுத்துரைத்தார் பேராயர் காச்சா.
இராணுவ நோக்கங்களுக்காக புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதும் ஆழ்ந்த கவலைக்குரியது என்று தெரிவித்துள்ள பேராயர் காச்சா அவர்கள், குறிப்பாக பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இடங்களில் இத்தகைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது சிக்கலான சட்ட நெறிமுறை மற்றும் மனிதாபிமான கவலைகளை எழுப்புகின்றன என்றும் கூறினார்.
கண்மூடித்தனமான ஆயுதங்கள், கண்ணிவெடிகள் மற்றும் வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதை நிறுத்துதல், மக்கள் தொகை நிறைந்த பகுதிகளில் வெடிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துதல் அவசியம் என்று திருப்பீடம் வலியுறுத்துவதாகவும் எடுத்துரைத்தார் பேராயர் காச்சா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்