MAP

காஸ்தெல் கண்டோல்போவில் திருத்தந்தை காஸ்தெல் கண்டோல்போவில் திருத்தந்தை  

காஸ்தெல் கண்டோல்போவில் திருத்தந்தை பதினான்காம் லியோ!

மே 29, இவ்வியாழனன்று, திருத்தந்தை பாப்பிறைகளின் கோடை விடுமுறை மாளிகை அமைந்திருக்கும் காஸ்தெல் கண்டோல்போவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்ட பதினான்காம் லியோ அவர்கள், Borgo Laudato si' எனப்படும் விவசாயத் திட்டம் உட்பட பலவற்றை பார்வையிட்டுத் திரும்பியுள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மே 29, இவ்வியாழனன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பாப்பிறைகளின் கோடை விடுமுறை மாளிகை அமைந்திருக்கும் காஸ்தெல் கண்டோல்போவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டார் என்றும், அங்கு அவர் மறைந்த முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தொடங்கப்பட்ட Borgo Laudato si' எனப்படும் விவசாயத் திட்டத்தைப் பார்வையிட்டார் என்றும் தெரிவித்துள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

மேலும் அங்குச் சென்ற திருத்தந்தையை ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கான திருப்பீடத் துறையின் துணைச் செயலாளர் கர்தினால் ஃபேபியோ பாகியோ மற்றும் விரைவில் திறக்கப்படவுள்ள Borgo Laudato si'  திட்டத்தின் விவசாயத் திட்ட இயக்குநர் அருள்பணியாளர் மானுவல் தொரன்தெஸ் இருவரும் பெரும்மகிழ்வுடன் திருத்தந்தையை வரவேற்றனர் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.

காஸ்தெல் கண்டோல்போவிலுள்ள அன்னை மரியாவின் தோட்டத்தில் சிறிது நேரம் செலவிட்ட திருத்தந்தை, பின்னர் பெல்வெதேரே தோட்டங்களைப் பார்வையிட்டார் என்றும், அதனைத் தொடர்ந்து, கிரிப்தோபோர்த்திக்கசிலில் சிறிது நேரம் தங்கி, உரோமானியப் பேரரசர் டொமிஷியனின் பார்வையாளர் மண்டபத்திலுள்ள தொல்பொருள் அழிபாட்டுச் சின்னங்களைப் பார்வையிட்டார் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது காஸ்தெல்லி உரோமானி பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு 1944-ஆம் ஆண்டு 12,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு அடைக்கலம் அளித்த திருத்தந்தை பனிரெண்டாம் பயஸ் அவர்களின் துணிவுமிகு செயல்களையம் அவ்விடத்தில் நினைவு கூர்ந்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது. 

கடந்த 2016-ஆம் ஆண்டு மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காஸ்தெல் கண்டோல்போவிற்குப் பயணம் செய்தபோது, அருங்காட்சியகமாக மாற்றிய அப்போஸ்தலிக்க மாளிகையையும், வரலாற்று சிறப்புமிக்க பர்பேரிணி மாளிகையும் (Villa Barberini) பார்வையிட்ட பிறகு வத்திக்கான் திரும்பினார் திருத்தந்தை என்றும் குறிப்பிட்டுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 மே 2025, 14:25