MAP

திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் 

அமைதியை விரும்பும் மனிதர் திருத்தந்தை 14-ஆம் லியோ

ஞாயிற்றுக்கிழமை பாஸ்கா கால மூவேளை செப உரை, கீழை வழிபாட்டு முறை திருஅவையினருடனான சந்திப்பு போன்றவற்றில் அமைதியை அதிகமாக வலியுறுத்தியவர் திருத்தந்தை 14-ஆம் லியோ.

மெரினா ராஜ் – வத்திக்கான்

புதிய திருத்தந்தை மிகவும் அமைதியான மனிதர், அமைதியை விரும்பும் மனிதர் என்றும், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாளன்று மக்கள் முன் தோன்றிய போது எடுத்துரைத்த உரையிலேயே அமைதியின் பாலங்களைக் கட்டுபவர் என்பதை எடுத்துரைத்தார் என்றும் கூறினார் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

மே 14 புதன்கிழமை முதல் 15 வியாழன் வரை, “உக்ரைனுக்காக உக்ரைனிலிருந்து எதிர்நோக்கு இறையியலை நோக்கி” என்ற தலைப்பில் உரோமின் கிரகோரியன் திருப்பீடப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது உலக நாடுகளின் அமைதி மற்றும் புதிய திருத்தந்தை பற்றியக் கருத்துக்களை வத்திக்கான் செய்திகளுக்கு இவ்வாறு எடுத்துரைத்துள்ளார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

அமைதியின் ஒளிக்கீற்றுகள் எப்போதும் இருக்கும் என்று தான் நம்புவதாகவும், இறுதியாக நேரடியாக சந்தித்து உரையாடுவதற்கான ஒரு சூழல் தலைவர்களுக்குக் கிடைத்துள்ளது, எனவே பிரச்சனை முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும் என்று எண்ணி மிகவும் மகிழ்வதாகவும் எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு நிலையை அடைவதற்கு இஸ்தான்புல் ஒரு தீவிரமான தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்பது தனது நம்பிக்கை என்று எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், "மத்திய கிழக்குப்பகுதியானது கிறிஸ்தவர்களை தனது பகுதியிலிருந்து காலி செய்வதால் கவலை ஏற்படுகின்றது என்றும், இந்த பெரிய பிரச்சினைக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை பாஸ்கா கால மூவேளை செப உரை, கீழை வழிபாட்டு முறை திருஅவையினருடனான சந்திப்பு போன்றவற்றில் அமைதியை அதிகமாக வலியுறுத்தியவர் திருத்தந்தை 14-ஆம் லியோ என்றும், போரை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான  வேண்டுகோளை அவர் தொடர்ந்து புதுப்பிப்பார் என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.

நல்லிணக்கம் மற்றும் உரையாடலை ஏற்படுத்துவதற்கான ஓர் இடத்தை வழங்க திருப்பீடம் எப்போதும் தயாராக இருக்கின்றது என்று எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், கர்தினால் ஷூப்பி அவர்களின் செயல்பாட்டால் இரஷ்யாவிற்கு கொண்டு செல்லப்பட்ட உக்ரைன் குழந்தைகள் பலர், தங்களது குடும்பத்திற்கு திரும்புகின்றனர் என்றும் கூறினார்.

காசாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருதல், பிணையக்கைதிகளை விடுவித்தல், காசாவில் மனிதாபிமான உதவிக்காக தொடர்ந்து அழைப்பு விடுத்தல் போன்ற திருப்பீடத்தின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அமைதியின் பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம் என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 மே 2025, 13:54