போர்நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை அவசியம் வேண்டும் – கர்தினால் பரோலின்
மெரினா ராஜ் - வத்திக்கான்
நாம் அனைவரும் எதிர்பார்க்கும் இரஷ்யர்களுக்கும் உக்ரேனியர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் எங்கு நடைபெறும் என்பது முக்கியமல்ல. மாறாக, போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்பதே முக்கியமானது என்று கூறினார் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
மே 27, செவ்வாய் காசாவில் நிலவும் வன்முறைச்சூழல், போர்நிறுத்தம், அமைதிக்கான பேச்சுவார்த்தை, யூத எதிர்ப்புக்கள் ஆகியவை குறித்தக் கருத்துக்களை வத்திக்கான் செய்திகளுக்காக, திருப்பீடச் சமூகத்தொடர்புத் துறையின் செய்திப் பிரிவுத் தலைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்களுக்கு வழங்கிய நேர்காணலின்போது இவ்வாறு எடுத்துரைத்தார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
காசாவில் நடப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, பன்னாட்டு மனிதாபிமான சட்டம் எப்போதும் அனைவருக்கும் பொருந்த வேண்டும் என்றும், குண்டுவெடிப்புகளை நிறுத்தவும், மக்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கப்பெறவும் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
ஹமாஸில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து பிணையக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டுவதாகவும், 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரயேலுக்கு எதிரான தாக்குதலுக்குப் பிறகு கொல்லப்பட்டவர்களின் உடல்களை திருப்பித் தர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துவதாகவும் எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்.
அண்மையில் வாஷிங்டனில் நடந்த தாக்குதலில் இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் கொல்லப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், இந்நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றது. ஏனெனில், இறந்தவர்கள் இருவரும் அமைதி மற்றும் மனிதாபிமான முயற்சிகளுக்காக உழைத்தவர்கள் என்று சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், புற்றுநோய் போன்ற யூத எதிர்ப்பு மீண்டும் தலைதூக்காமல் இருக்கும் வண்ணம் நாம் மிகுந்த விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
பேரழிவு தரும் போரினால் நகரங்கள் அழிக்கப்படுகின்றன, உயிர்கள் கொல்லப்படுகின்றன, எனவே, போர் நிறுத்தம் அவசரமாகத் தேவைப்படுகின்றது என்று தெரிவித்த கர்தினால் பரோலின் அவர்கள், இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்ட நீடித்த நிலையான அமைதியை அடைவது மிக அவசரமானது என்றும் கூறினார்.
புதிய திருத்தந்தை பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில் திருத்தந்தை பதினான்காம் லியோ தனது முன்னோடிகளின் அடிச்சுவடுகளில் தொடர்ந்து உறுதியாகப் பயணிக்கிறார் என்று எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், சிஸ்டைன் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் ஆற்றிய மறையுரை, பணியேற்புத் திருப்பலியில் ஆற்றிய மறையுரை என எல்லாவற்றிலும், போர் இனி ஒருபோதும் வேண்டாம், அமைதிக்கான உடையாடல் வேண்டும் என்பதை அதிகமாக வலியுறுத்தினார் என்றும் கூறினார்.
கிறிஸ்துவை நமது வாழ்வின் மிக முக்கியமான நபராகக் கொண்ட கிறிஸ்தவர்களாகிய நாம், மற்றவர்களை விட உயர்ந்தவர்களாக நம்மைக் கருதாமல், மாவில் சேர்க்கப்படும் புளிக்காரம் போன்று, அன்பு, ஒற்றுமை மற்றும் அமைதிக்கு சான்றளிக்க அழைக்கப்படுகின்றோம் என்று திருத்தந்தை 14-ஆம் லியோ வலியுறுத்துவதாகவும் எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்