உடன்பிறந்த உணர்வுடன் நற்செய்தியை அறிவிக்கும் சமூகமாக திருஅவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மே மாதம் 2ஆம் தேதி வத்திக்கானில் இடம்பெற்ற கர்தினால்களின் எட்டாவது கூட்டத்தில் ஏறக்குறைய 180 கர்தினால்களுக்கு சிறிது அதிகமான கர்தினால்கள் கலந்துகொண்டு, 25 பேரின் உரைகள் இடம்பெற்றதாக திருப்பீடப் பேச்சாளர் மத்தேயோ புரூனி அறிவித்தார்.
காலை உள்ளூர் நேரம் 9 மணிக்கு செபத்துடன் துவங்கிய கர்தினால்களின் கூட்டம் 12.30 மணிக்கு நிறைவுக்கு வந்தது.
திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதிற்குட்பட்ட 120க்கும் மேற்பட்ட கர்தினால்களுடன் 180க்கும் சிறிது அதிகமான கர்தினால்கள் இடம்பெற்ற இக்கூட்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் காலத்தில் நற்செய்தி அறிவிப்புக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறித்து முதலில் விவாதிக்கப்பட்டது.
உடன்பிறந்த உணர்வுடன் நற்செய்தியை அறிவிக்கும் சமூகமாக திருஅவையை நோக்குதல், நற்செய்தியை, குறிப்பாக இளையோருக்கு அறிவிப்பது குறித்த கேள்வி போன்றவை விவாதிக்கப்பட்டன.
கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளும் அவர்களின் துயர்களும் சாட்சியங்களும், அனைத்து நிலைகளிலும் நற்செய்தியை பலனுடையதாக மாற்றுவது, சான்று பகர்வதற்கும் ஒன்றிப்பிற்குமான நம் கடமை போன்றவைகள் குறித்து விவாதித்த கர்தினால்கள், திருஅவையில் பாலியல் அத்துமீறல்கள், நிதி முறைகேடுகள் போன்றவை குறித்தும் விவாதித்தனர்.
வழிபாட்டுக் கொண்டாட்டங்களின் முக்கியத்துவம், திருஅவையில் ஒன்றிணைந்து நடைபோடுதல் போன்றவை குறித்தும் கர்தினால்கள் அவை தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்