MAP

சிஸ்டைன் சிற்றாலய புகைக்கூண்டு சீரமைக்கும் பணி ஆரம்பம்

புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் வெண்புகையும், இல்லாவிடில் கரும்புகையும் புகைக்கூண்டுகளிலிருந்து வெளியேறும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மே 7, புதன்கிழமை ஆரம்பமாக உள்ள கான்கிளேவ் அவைக்காக சிஸ்டைன் சிற்றாலயம் தயாராகி வரும் நிலையில் சிஸ்டைன் சிற்றாலயத்தில் திருத்தந்தை தேர்வு செய்யப்பட்டதை அறிவிக்கும் புகைக்கூண்டானது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

மே 2 வெள்ளிக்கிழமை காலை முதல் சிஸ்டைன் சிற்றாலயத்தின் மேற்கூரையில் புகை வெளிவருவதை மக்கள் காணும் பொருட்டு புகைபோக்கியானது வத்திக்கான் தீயணைப்புப் பணியாளர்களால் மாற்றியமைக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சிஸ்டைன் சிற்றாலயத்தில் நிறுவப்பட்டுள்ள இரண்டு புகைக்கூண்டுகளில் இருந்து வெளிவரும் புகையானது மேற்கூரையில் நிறுவப்பட்டுள்ள புகைப்போக்கியின் வழியாக வெளிவரும், எனவே, புகைக்கூண்டுகள் சீரமைக்கப்பட்டு பொருத்தப்படும் பணிகள் ஆரம்பாமிகியுள்ளன.

காலையில் இரண்டு மதியம் இரண்டு என நாளொன்றிற்கு 4 முறை திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடைபெறும். புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் வெண்புகையும், இல்லாவிடில் கரும்புகையும் புகைக்கூண்டுகளிலிருந்து வெளியேறும். வாக்குச்சீட்டுகள் அனைத்தும் புகைக்கூண்டிற்குள் இடப்பட்டு குறிப்பிட்ட வேதிப்பொருள்களுடன் நெருப்பிடப்பட்டு வெண்புகை அல்லது கரும்புகை வெளியிடப்படும்.

உரோம் உள்ளூர் நேரம் பகல் 12 மணி மற்றும் மாலை 7 மணி என இரு நேரங்களில் இந்த புகையானது வெளியிடப்படுவதன் வழியாக புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பதை மக்களுக்குக் கர்தினால்கள் அறிவிப்பர்.    

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 மே 2025, 11:43