MAP

புலம்பெயர்ந்தோர் திருஅவையின் பரிசாக அங்கீகரிக்கப்பட...

வத்திக்கானில் உள்ள பவுலின் சிற்றாலயத்தில் மே 5 திங்கள்கிழமை மாலை, கான்கிளேவ் அவைக்கு உதவ இருக்கும் வத்திக்கான் பணியாளர்கள் இரகசியம் காக்கும் வாக்குறுதியை எடுத்துக்கொண்டனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

புலம்பெயர்ந்தோர் திருஅவையின் பரிசாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது பற்றியும், புலம்பெயர்ந்தோருடன் இணைந்து செல்வதன் அவசரம், இயக்கம் மற்றும் மாற்றத்தின் சூழல்களில் அவர்களின் நம்பிக்கையை ஆதரித்தல் போன்றவை பற்றியும் பதினொன்றாவது கர்தினால்கள் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

பதினொன்றாவது கர்தினால்கள் கூட்டமானது மே 5, திங்கள்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை 5.00 மணிக்கு சிறு செபத்துடன் ஆரம்பானது. 80 வயதிற்குட்பட்ட 132 வாக்களிக்கும் உரிமை கொண்ட கர்தினால்கள் உட்பட மொத்தம் 170 கர்தினால்கள் கலந்து கொண்டனர்.

மேய்ப்ப்புப்பணியின் முக்கியத்துவம், திருஅவை தொடர்புடைய கருப்பொருள்களை மையமாகக் கொண்ட ஏறக்குறைய இருபது உரைகள் இடம்பெற்றன. திருஅவைக்குள்ளும் சமூகத்திலும் இனவெறி பற்றிய கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளிலிருந்து வந்திருந்த கர்தினால்களின் அனுபவங்கள் சான்றுகளாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து கூட்டொருங்கியக்கத் திருஅவையின் பாதை பற்றிய கருத்துக்களும் பகிரப்பட்டன.

அனைவரும் ஒன்றிணைந்து பங்கேற்கவும், செவிசாய்க்கவும், பகுத்தறியவும் அழைக்கப்படுகின்றோம் என்பது குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட கர்தினால்கள் புதிய திருத்தந்தையை ஆதரிப்பதற்கான தங்களது உறுதிப்பாட்டையும், பொறுப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

புதிதாக தேற்ந்தெடுக்கப்பட உள்ள திருத்தந்தை ஓர் உண்மையான போதகராக, கத்தோலிக்க திருஅவையின் எல்லைகளுக்கு அப்பால் தனித்துச் சென்று, உரையாடலை ஊக்குவித்து, பிற மத மற்றும் கலாச்சார உலகங்களுடன் உறவுகளை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பதை அறிந்த ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும்  எடுத்துரைத்தனர்.

உலகின் பல்வேறு பகுதிகளில் அதிகமாக ஏற்படும் பிரிவுகள் அடையாளப்படுத்தும் சவால்கள் குறித்தும் இக்கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

மே 5, திங்கள்கிழமை மாலை வத்திக்கானில் உள்ள பவுலின் சிற்றாலயத்தில் கான்கிளேவ் அவைக்கு உதவ இருக்கும் வத்திக்கான் பணியாளர்கள் திருவழிபாட்டு உதவியாளர்கள் அனைவரும் இரகசியம் காக்கும் வாக்குறுதியை எடுத்துக்கொண்டனர்.

திருவிவிலியத்தின்மீது கைகளை வைத்து ஒவ்வொருவரும் கான்கிளேவ் அவை சம்பந்தமான விடயங்களை மிகவும் இரசகசியமாக வைத்திருப்போம் என்று கூறி தங்களது வாக்குறுதிகளை எடுத்துரைத்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 மே 2025, 14:35