வாரம் ஓர் அலசல் – திருத்தந்தை தேர்வில் கர்தினால்கள் அவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருத்தந்தைக்காக திருப்பலி நிறைவேற்றி அவர் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிக்கும் ஒன்பது நாள் கொண்ட காலம் மே மாதம் 4ஆம் தேதி திருப்பலியுடன் நிறைவுற்றதைத் தொடர்ந்து இரு நாள் இடைவெளிக்குப்பின் மே மாதம் 7ஆம் தேதி புதிய திருத்தந்தையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் கலந்துகொள்ளும் தகுதியுடைய, 80 வயதிற்குட்பட்ட 133 கர்தினால்களும் சிஸ்டைன் கோவிலில் கூட உள்ளனர். திருத்தந்தையின் தேர்வு ஆகியவைகளைக் குறித்து விவாதித்து வரும் கர்தினால்கள் அவை ஏப்ரல் 28, திங்களன்று தன் ஐந்தாவது அவைக் கூட்டத்தில், வாக்கெடுப்பு மே மாதம் 7ஆம் தேதி துவங்கும் என்ற முடிவை எடுத்தது.
நாளை மறுநாள் அதாவது மே மாதம் 7ஆம் தேதி காலை இத்தாலிய நேரம் காலை 10 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பிற்பகல் 1.30 மணிக்கு திருத்தந்தையர் தேர்தலுக்கு தயாரிப்பு திருப்பலி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் இடம்பெறும். அதன்பின் மாலை உள்ளூர் நேரம் 4.30 மணிக்கு ஐந்து கண்டங்களிலிருந்து 70 நாடுகளின் 133 கர்தினால்கள், வாக்கெடுப்பில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் இவர்கள் வத்திக்கானின் சிஸ்டைன் சிற்றாலயத்திற்கு அருகில் இருக்கும் பவுலின் சிற்றாலயத்தில் கூடி புனிதர்கள் மன்றாட்டைப் பாடுவர். அதன்பின் கர்தினால்கள் வரிசையாக சிஸ்டைன் சிற்றாலயத்திற்குள் நுழைவர்.
80 வயதிற்குட்பட்ட கர்தினால்கள் 135 பேர் திருஅவையில் இருப்பினும், 133 பேரே இந்த தேர்தல் வாக்கெடுப்பில் கலந்துகொள்கின்றனர். ஏனெனில் இரு கர்தினால்கள் உடல் நிலை காரணமாக இந்த தேர்தல் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அவர்கள், இஸ்பெயின் நாட்டு கர்தினால் Antonio Cañizares அவர்களும், கென்யாவின் கர்தினால் John Njue அவர்களுமாவர். இவர்கள் இருவரும் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் கர்தினால்களாக உயர்த்தப்பட்டவர்கள்.
மே மாதம் 7ஆம் தேதி பிற்பகலில் சிஸ்டைன் சிற்றாலயத்தில் அடுத்த திருத்தந்தையின் தேர்வில் கலந்துகொள்ளும் கர்தினால்கள் அனைவரும் முதலில் தங்கள் உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வர். தான் அடுத்தத் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டால் திருஅவையின் இவ்வுலகத் தலைவருக்குரிய கடமைகளை விசுவாசமுடன் நிறைவேற்றுவேன் எனவும், தேர்தல் தொடர்புடைய விவரங்களையும் அங்கு நடந்தவைகளையும் மிகவும் இரகசியமாக வைத்திருப்பேன் எனவும், தேர்தலில் வெளிப்புற தலையீட்டை அனுமதிக்க மாட்டேன் எனவும் ஒவ்வொரு கர்தினாலும் உறுதிமொழி எடுப்பர்.
இதன்பின் 80 வயதிற்கு மேற்பட்ட கர்தினால்கள் சிஸ்டைன் சிற்றாலயத்திலிருந்து வெளியேறியபின், வாக்களிப்பவர்களுக்கு திருஅவையின் நலன் குறித்தவைகளில் பொறுப்புணவு குறித்த ஆன்மீக சிந்தனை 90 வயது கர்தினால் Raniero Cantalamessa அவர்களால் வழங்கப்படும். இவர் முற்காலத்தில் திருத்தந்தை உட்பட திருஅவை அதிகாரிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் தியானச் சிந்தனைகளை வழங்குபவராகச் செயல்பட்டவர்.
தேர்தலில் வாக்கெடுப்பில் பங்குபெறுபவர்களுக்கான தியானச் சிந்தனைகளுக்குப்பின் இவரும், பாப்பிறை திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்கான துறைத் தலைவரும் சிஸ்டைன் சிற்றாலயத்தினை விட்டு வெளியேறுவர். இதன்பின் கமர்லெங்கோ எனப்படும் கர்தினால் Kevin Farrell அவர்களின் தலமையில் மூன்று கர்தினால்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அன்றாட பணி நடவடிக்கைகளில் உதவுவர். கர்தினால்களுள் மூன்று வகையாக இருக்கும், கர்தினால் திருத்தொண்டர்கள், கர்தினால் குருக்கள், கர்தினால் ஆயர்கள் என ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவர் என தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று நாட்களுக்குப் பணிபுரிவர். இவ்வாறு மூன்று நாட்களுக்கு ஒரு முறை புதிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிக்குழு அமைக்கப்படும்.
இந்தத் தேர்தலானது ஒவ்வொரு நாளும் காலையில் 2, மாலையில் 2 என முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறும். அதுவரை புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லையெனில் செபம் மற்றும் தியானத்திற்கென ஒருநாள் விடப்படும். பின்னர் அடுத்த நாள் வாக்கெடுப்புத் தொடங்கும். புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும்வரை தினமும் பகல் 12 மணியளவிலும், மாலை 7 மணியளவிலும் சிஸ்டைன் கோவில் புகைப் போக்கி வழியாக புகை வெளியிடப்படும். திருத்தந்தையின் தேர்தல் நிலவரம் குறித்து பொது மக்களுக்கு அறிவிப்பதற்கு சிஸ்டைன் சிற்றாலயத்தின் மேற்கூரையில் புகைபோக்கி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. திருத்தந்தைத் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் கருப்புப் புகையும், தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் வெண்புகையும் வெளியே வரும். இந்தப் புகைகள் வெளிவருவதற்கு வாக்குச்சீட்டுகளுடன் வேதியப் பொருள்களும் சேர்த்து எரிக்கப்படும். வெண்புகையை வெளியிடும் வழக்கம் 1903-ஆம் ஆண்டிலிருந்து திருஅவையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் காலத்தின்போது கர்தினால்கள் கடிதம் எழுதுவதோ, கலந்துரையாடலோ, தொலைபேசி அழைப்புக்களோ, மிகவும் அவசரமாக இருந்தாலொழிய அனுமதிக்கப்படாது. தேர்தலில் கலந்துகொள்ளும் கர்தினால்களுக்கு பத்திரிகைகளும், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தடைச் செய்யப்பட்டவைகளாகவே இருக்கும். இந்தியாவிலிருந்து 4 கர்தினாலகள் தற்போதைய தேர்தல் வாக்கெடுப்பில் கலந்துகொள்கின்றனர். கோவா-டாமன் பேராயர்-கர்தினால் பிலிப் நேரி பெராவ், கேரளாவின் சீரோ மலங்கரா வழிபாட்டுமுறை திருஅவைத் தலைவர் கர்தினால் பசேலியேஸ் கிளிமீஸ், ஹைதராபாத் பேராயர்-கர்தினால் ஆன்டனி பூலா, வத்திக்கானில் பணிபுரியும் கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு ஆகியோரே இந்த நால்வராவர்.
இன்று உலகில் வாழும் 252 கர்தினால்களுள் 114 பேர் ஐரோப்பாவையும், 37 பேர் ஆசியாவையும், 32 பேர் தென் அமெரிக்காவையும், 29 பேர் ஆப்ரிக்காவையும் 28 பேர் வட அமெரிக்காவையும் 8 பேர் மத்திய அமெரிக்காவையும், 4 பேர் ஓசியானியாவையும் சேர்ந்தவர்கள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டவர்களுள் 148 பேர் தற்போது உயிர் வாழ்கின்றனர், இதில் 108 பேர் 80 வயதிற்குட்பட்டவர்கள். திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டு, தற்போது உயிரோடு இருக்கும் 62 பேரில் 22 பேரே 80 வயதிற்குட்பட்டவர்கள். 20 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டு தற்போது உயிரோடு இருக்கும் 41 கர்தினால்களுள் 5 பேரே 80 வயதிற்குட்பட்டவர்கள். இவர்கள் ஐவர் மட்டுமே, திருத்தந்தையர்கள் பதினாறாம் பெனடிக்ட், திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலில் பங்குபெற்றதோடு, அடுத்த திருத்தந்தைக்கான தேர்தலிலும் பங்கெடுக்க உள்ளனர்.
வரலாற்றில் முதன்முறையாக தற்போது, ஹெய்ட்டி, கேப் வெர்தே, மத்திய ஆப்ரிக்க குடியரசு, பாப்புவா நியு கினி, மலேசியா, ஸ்வீடன், லக்ஸம்பர்க், கிழக்கு திமோர், சிங்கப்பூர், பரகுவாய், தென்சூடான், செர்பியா, மங்கோலியா ஆகிய 13 நாடுகளிலிருந்து கர்தினால்கள் திருத்தந்தைக்கான தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
திருத்தந்தையின் தேர்தலில் வாக்களிக்க உள்ள கர்தினால்களுள் 52 பேர் ஐரோப்பியக் கண்டத்தையும், அதிலும் 19 பேர் இத்தாலியையும், 37 பேர் அமெரிக்கக் கண்டத்தையும், 23 பேர் ஆசியாவையும், 17 பேர் ஆப்ரிக்காவையும், 4 பேர் ஒசியானியாவையும் சேர்ந்தவர்கள். தற்போது வாக்களிக்க உள்ள கர்தினால்களுள் 33 பேர் 18 துறவுசபைகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கத்தோலிக்கத் திருஅவையின் முதல் திருத்தந்தையான இயேசுவின் திருத்தூதர் தூய பேதுருவுக்குப் பின்னர், திருஅவையை நீண்ட காலம் வழிநடத்தியவர் திருத்தந்தை 9ஆம் பயஸ். இவர் 1846 முதல் 1878 வரை 32 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார். அதற்கடுத்தபடியாக, புனித திருத்தந்தை 2ஆம் ஜான் பால் 26 ஆண்டுகள் 168 நாள்கள் பதவியில் இருந்து 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி காலமானார். அதற்கு பின் வந்த திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் 8 ஆண்டுகளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 12 ஆண்டுகளும் திருஅவையை வழிநடத்திச் சென்றுள்ளனர்.
திருத்தந்தையர்களின் பெயர்களைப் பார்த்தோமானால் ஜான் என்ற பெயர்தான் 23 தடவைகளும், கிரகரி, பெனடிக்ட் ஆகிய பெயர்கள் ஒவ்வொன்றும் 16 தடவைகளும் வந்துள்ளன. ஆனால், 20ஆம் ஜான் என்ற பெயரை எவரும் எடுத்ததாகத் தெரியவில்லை. 43 பெயர்கள் ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தப்படவில்லை.
அன்புள்ளங்களே, வரும் புதன்கிழமையன்று துவங்கும் கான்கிளேவ் எனப்படும் திருத்தந்தை தேர்தல் வாக்கெடுப்பிற்காக நம் இறைவேண்டலை சமர்ப்பிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்