சிஸ்டைன் சிற்றாலயத்தில் நுழைந்துள்ளனர் கர்தினால்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மே மாதம் 7ஆம் தேதி புதன்கிழமையன்று, திருத்தந்தையை தேர்ந்தெடுக்க சிஸ்டைன் சிற்றலாயத்திற்குள் நுழைவதற்கு முன்னான தயாரிப்பு திருப்பலியை வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றிய கர்தினால்கள், மாலை உள்ளூர் நேரம் 4.30 மணிக்கு தங்கள் வாக்கெடுப்பு தயாரிப்பு நிகழ்வுகளைத் துவக்கினர்.
கர்தினால்கள் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து உள்ளூர் நேரம் பிற்பல் 3.45 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் மாலை 7.15 மணிக்கு தாங்கள் வாக்களிக்க உள்ள சிஸ்டைன் சிற்றாலயத்திற்கு முன்னர் பவுலின் சிற்றாலயம் நோக்கிச் சென்றனர்.
புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் உள்ளூர் நேரம் மாலை 7 மணிக்கு வெள்ளை புகையும், தேர்ந்தெடுக்கப்படவில்லையெனில் கருப்புப் புகையும் சிஸ்டைன் சிற்றலாயத்தின் மேலிருக்கும் புகைப் போக்கி வழியாக வெளியிடப்படும்.
புதன் இரவு வத்திக்கானிலுள்ள சாந்தா மார்த்தா இல்லத்துக்குத் திரும்பும் கர்தினால்கள், மே 8, வியாழக்கிழமையன்று காலை உள்ளூர் நேரம் 7.45 மணிக்கு அங்கிருந்து கிளம்பி சிஸ்டைன் சிற்றாலயத்திற்கு அருகில் இருக்கும் பவுலின் சிற்றாலயத்தில் காலை திருப்பலி நிறைவேற்றி, 9.15 மணிக்கு செபத்துடன் வாக்குப் பதிவைத் தொடர்வர். திருத்தந்தையின் தேர்வு குறித்து ஏறக்குறைய 10.30 மணிக்கு புகை வெளியேற்றப்பட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும்.
வெள்ளைப் புகை இல்லையெனில் நண்பகல் 12 மணிக்கு மீண்டும் புகை வெளியேற்றப்படுவதன் வழியாக தேர்வின் முடிவுகள் உலகுக்கு அறிவிக்கப்படும்.
நண்பகல் 12.30 மணிக்கு சாந்தா மார்த்தா இல்லம் திரும்பும் கர்தினால்கள் மீண்டும் மாலை 3 மணி 45 நிமிடங்களுக்கு சிஸ்டைன் சிற்றாலயம் நோக்கி பயணம் செய்து 4.30 மணிக்கு வாக்குப் பதிவைத் துவக்குவர்.
மாலை 5.30 மணிக்கு வெள்ளைப்புகை வரவில்லையெனில், 7 மணிக்கு மீண்டும் புகைப் போக்கியில் வரும் புகை நிறத்தின் வழியாக முடிவுகள் தெரிவிக்கப்படும். இது புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும் வரை தொடரும்.
ஒவ்வொரு நாளும் மாலையின் இரண்டாவது வாக்குபதிவுக்குப் பின், 7.30 மணிக்கு சிஸ்டைன் சிற்றாலயத்தில் மாலை வழிபாட்டை நிறைவேற்றி கர்தினால்கள் சாந்தா மார்த்தா இல்லம் திரும்புவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்