மனித மாண்பு, பொதுநன்மையை வலியுறுத்தும் கத்தோலிக்க சமூக சிந்தனை
மெரினா ராஜ் - வத்திக்கான்
கத்தோலிக்க சமூக சிந்தனை என்பது ஒரு அரசியல் சித்தாந்தமோ அல்லது ஒரு கடுமையான கோட்பாடுமோ அல்ல, மாறாக, விவிலியம், திருஅவைப் போதனை மற்றும் மனித பகுத்தறிவிலிருந்து பெறப்பட்ட கொள்கைகளின் ஒரு மாறும் பாரம்பரியம் என்றும், ஒவ்வொரு மனிதனின் மாண்பு, பொது நன்மை, ஒற்றுமை மற்றும் படைப்பின் மீதான அக்கறை போன்றவற்றை வலியுறுத்துகிறது என்றும் கூறினார் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
மே16, வெள்ளிக்கிழமை மாலை Centesimus Annus என்ற பாப்பிறை ஆதரவு நிறுவனத்தைச் சார்ந்தவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
ஒவ்வொரு நபரும் கடவுளின் சாயலில் மாண்புடன் வாழ படைக்கப்பட்டுள்ளனர் என்று வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், ஏழைகள், முதியவர்கள், கருவில் இருக்கும் குழந்தைகள் போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைகளை உலகளாவிய நிர்வாகம் செயல்படுத்த வேண்டும் என்றும் மொழிந்தார்.
கத்தோலிக்க சமூக சிந்தனை வேறுபாடுகளை அழிப்பதன் வாயிலாக அல்ல, மாறாக அவற்றைக் கடந்து செல்வதன் வழியாக நல்லிணக்கத்திற்கான பாதையை வழங்குகிறது என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.
சமூக, பொருளாதார மற்றும் அரசியல் எதார்த்தங்களுக்கு நற்செய்தியைப் பயன்படுத்த முயல்கிறது என்று வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், உலகளாவிய நிர்வாகத்தை வலுப்படுத்துதல், மனித மாண்பை அடித்தளமாகக் கொண்டிருத்தல், பொது நன்மையை இலக்காகக் கொள்ளுதல், சமநிலையில் துணையாகவும் ஒன்றித்தும் இருத்தல், எல்லைகளைச் சமாளித்தல் என்னும் தலைப்பின் கீழ் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.
உலகளாவிய நிர்வாகம் என்பது அதிகாரத்துவத்தை விட மனித சமூகங்களை நீதி, அமைதி மற்றும் செழிப்பை நோக்கி ஒழுங்குபடுத்துவது பற்றியது என்றும், உலகளாவிய நிர்வாகம் சட்டபூர்வமான நெருக்கடியை எதிர்கொள்கிறது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்.
எல்லைகளைத் தாண்டி மற்றவர்களுடன், குறிப்பாக ஓரங்கட்டப்பட்டவர்களுடன் நிற்க நம்மை அழைக்கிறது என்றும், இடம்பெயர்வு கொள்கைகள் போர் அல்லது வறுமை போன்ற மூல காரணங்களை நிவர்த்தி செய்ய உலகளாவிய ஒத்துழைப்பை உறுதி செய்யும் அதே வேளையில், புதியவர்களை ஒருங்கிணைக்க உள்ளூர் சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்றார் கர்தினால் பரோலின்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்