இயேசுவை முன்மாதிரிகையாகக் கொண்டவர் அருளாளர் Stanisław Streich
மெரினா ராஜ் - வத்திக்கான்
இயேசு பயன்படுத்திய நல்லாயனின் உருவம், புதிய அருளாளரான Stanisław Streich அவர்களின் சான்றுள்ள வாழ்விற்கு ஓர் அர்த்தத்தை வழங்குகின்றது என்றும், தனது குருத்துவ வாழ்விலும் பணிவாழ்விலும் இயேசுவை முன்மாதிரிகையாகக் கொண்டு வாழ்ந்தவர் அவர் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் மர்செல்லோ செமராரோ.
மே 24, சனிக்கிழமை போலந்தின் Poznań மறைமாவட்ட பேராலயத்தில் அருள்பணி Stanisław Streich அவர்களை அருளாளராக உயர்த்தும் திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் புனிதர் பட்ட நிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மர்செல்லோ செமராரோ.
வாழ்க்கையை அன்பு செய்கின்ற நபராக எளிமையாகவும் மாண்போடும் வாழ்ந்த அருளாளர் அவர்கள், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையாம் மக்களை மாண்போடும் மகிழ்வோடும் வழிநடத்தியவர் என்றும் கூறினார் கர்தினால் செமராரோ.
“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்” (யோவான் 12:24) என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கேற்ப தனது வாழ்வை மக்களுக்காக, மக்கள் பணிக்காக அர்ப்பணித்தவர் என்பது அவரது வாழ்வில் தெளிவாக வெளிப்பட்டது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் செமராரோ.
திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருக்கும்போது வன்முறையாளர்களால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட அருளாளரை அல்ல. மாறாக, தனது வாழ்வையே கொடையாகக் கையளித்த அவரின் தியாகத்தினை நினைவுகூர நாம் அழைக்கப்படுகின்றோம் என்றும், நமது காலத்தின் சவால்கள் மற்றும் சோதனைகளுக்கு மத்தியிலும், கடவுள் மேல் அதிகமாக நம்பிக்கை கொள்ளவும் அவரில் இணைந்து வாழவும் அருளாளரின் வார்த்தை நமக்குக் கற்பிக்கிறது என்றும் கூறினார் கர்தினால் செமராரோ.
அன்பே கடவுள் என்று நம்புங்கள்! நல்லதோ கெட்டதோ அதை நம்புங்கள்! உங்களுக்குள் நம்பிக்கையை எழுப்புங்கள்! ஒவ்வொரு சோதனையிலும் கடவுளுக்கு உண்மையாக இருப்பதன் பலனை அது உங்களில் உற்பத்தி செய்யட்டும் என்றும், தீமை அதிகமாக உணரப்படும் இடத்தில், நாம் அதிகமாக கடவுளையும் அவருடைய அன்பையும் தேடலாம் என்று எதிர்நோக்கிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த யூபிலி ஆண்டில் அருளாளராக உயர்த்தப்பட்ட அவர் நமக்குக் கற்பிக்கிறார் என்றும் தெரிவித்தார் கர்தினால் செமராரோ.
கிறிஸ்துவின் உண்மையுள்ள இறைவார்த்தையின் தேவையை அதிகமாகக் கொண்டவர்களைத் தேடிச் செல்வதற்கு படைப்பாற்றல், துணிவு, சுதந்திரம் மற்றும் தாராள மனப்பான்மை நமக்கு ஒருபோதும் குறைவுபடக்கூடாது என்று அருளாளர் வலியுறுத்துவதாக எடுத்துரைத்தார் கர்தினால் செமராரோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்