கடவுளது நன்மையின் மதிப்பை உறுதிப்படுத்தும் புதிய அருளாளர்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
அருளாளர்களாக உயர்த்தப்பட்ட அருள்சகோதரிகள் 15 பேரும் வன்முறையாளர்களால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்தாலும், தங்களது சான்று வாழ்வால் கடவுள் மற்றும் நன்மையின் வற்றாத மதிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறார்கள் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் மர்செல்லோ செமராரோ.
மே 31, சனிக்கிழமை அன்னை மரியா எலிசபெத்தைச் சந்தித்த திருவிழாவன்று போலந்தின் Braniewo திருத்தலத்தில் தூய கேத்தரின் சபை அருள்சகோதரிகள் 15 பேர் அருளாளர்களாக உயர்த்தப்பட்ட திருப்பலிக்குத் திருத்தந்தையின் சார்பாக தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு எடுத்துரைத்தார் புனிதர் பட்ட நிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மர்செல்லோ செமராரோ.
அன்னை மரியா எலிசபெத்தைச் சந்தித்த திருவிழாவன்று அருளாளர்களாக உயர்த்தப்பட்ட 15 அருள்சகோதரிகளும் அன்னை மரியின் பாடலுக்கு ஏற்றவாறு தாழ்நிலையில் இருந்து உயர்த்தப்படுகின்றார்கள் என்றும், அவருடைய அன்பில் நம்பிக்கை வைப்பவர்களுக்கு பெரிய காரியங்களை அவர் செய்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றார்கள் என்றும் கூறினார் கர்தினால் செமராரோ.
அன்னை மரியாவின் பாடல் வழியாக எடுத்துரைக்கும் கருத்துக்கள் மனிதர்களின் வரலாற்றைப் பார்ப்பதற்கான ஒரு புதிய அளவுகோல் என்று எடுத்துரைத்த கர்தினால் செமராரோ அவர்கள், அது கடவுளின் அளவுகோல், பணிவின் அளவுகோல் மற்றும் கடவுள் கரங்களில் நம்மை ஒப்படைப்பதற்கான அளவுகோல் என்றும் கூறினார்.
வெறுப்பு மற்றும் பிரிவினைக் கலாச்சாரத்தை எதிர்கொண்டவர்கள் புதிய அருளாளர்கள் என்றும், கடவுளையும் அவருடைய உண்மையும் வாழ்வுமான இறைவார்த்தையையும் மறுத்து, மனித மாண்பை மிதிப்பவர்கள் மத்தியில், வரலாற்றில் கடவுள் இருப்பதை உறுதியளிக்கும் சாட்சிகளாகத் திகழ்கின்றனர் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் செமராரோ.
மறைசாட்சிகளாக இறந்த அவர்களின் வாழ்க்கை வரலாறானது பழிவாங்கலையோ அல்லது மனித நீதியிலிருந்து இழப்பீடு கேட்கவோ அல்ல, மாறாக அவர்களிடம் உள்ள மிகவும் விலைமதிப்பற்றவைகளான மன்னிப்பு, பிறரன்பு மற்றும் ஒவ்வொரு மனிதனின் அன்பைப் பெறுவதற்காகவே எழுப்பப்படுகிறது என்று தெரிவித்தார் கர்தினால் செமராரோ.
பிறரன்புச்செயல்கள், கிறிஸ்துவின் மீதும், சகோதர சகோதரிகள் மீதும் கொண்டுள்ள அன்பு, உள்மன சுதந்திரம் போன்றவை நம்பிக்கையின் நிறைவு என்றும், இது எதிர்காலத்திற்கு அர்த்தம் தருகின்றது சந்திப்பின் எதிர்நோக்காக அதை மாற்றுகின்றது என்றும் கூறினார் கர்தினால் செமராரோ.
நம்பிக்கையின் நிறைவானது நாம் தனியாக இல்லை என்ற உறுதியையும், எல்லாவற்றையும் விட பெரிய ஓர் உடனிருப்பின் ஆற்றலை நம்பக்கூடிய சூழலை வாழ்வது என்றும் கூறிய கர்தினால் செமராரோ அவர்கள், இந்த அன்பின் காரணமாக, இதயம் "நன்மையுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது என்றும் மொழிந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்