ஏழை நாடுகளின் வெளிநாட்டுக் கடன் குறித்து வத்திக்கான் பிரதிநிதி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
நீதி, கருணை மற்றும் புதுப்பித்தலின் காலமாகிய யூபிலி ஆண்டில் ஏழை நாடுகளின் வெளிநாட்டுக்கடன்கள் நீக்கப்பட வேண்டியதன் ஒழுக்கரீதி கடமைகள் குறித்து ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றினார் திருப்பீட பிரதிநிதி பேராயர் எத்தோரே பலஸ்த்ரேரோ.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இருக்கும் ஐ.நா. அமைப்புக்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான திருப்பீட பிரதிநிதி பேராயர் பலஸ்த்ரேரோ அவர்கள், ‘கடன் நெருக்கடி மற்றும் வளர்ச்சிக்கான உரிமை’ என்ற தலைப்பில் ஜெனிவாவில் இடம்பெற்ற ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
பல கோடி மக்களின் வருங்காலம் வெளிநாட்டுக் கடன் சுமையோடு பின்னிப் பிணைந்துள்ளது என்ற கவலையை வெளியிட்ட பேராயர், வளர்ச்சி நெருக்கடி என்பது வெளிநாட்டு கடன் நெருக்கடியோடு பிரித்துப் பார்க்க முடியாதது எனவும் தெரிவித்தார்.
ஏழை நாடுகளின் வெளிநாட்டுக் கடன் 20 ஆண்டுகளில் 4 மடங்காக மாறியுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பேராயர் பலஸ்த்ரேரோ அவர்கள், அதாவது அவர்கள், பொருள் ஏற்றுமதி வழியாக கிடைக்கும் தொகையில் 99 விழுக்காட்டை நெருங்கியுள்ளதாகவும், அது 11.4 டிரில்லியன் டாலர்களை அடைந்துள்ளதாகவும் கூறினார்.
வளரும் நாடுகள் தங்கள் வெளிநாட்டு பொருள் ஏற்றுமதி வருமானத்தில் 16 விழுக்காட்டை வெளிநாட்டுக் கடனுக்கான வட்டியாகவே செலுத்தி வருவதாகவும் மேலும் தெரிவித்தார் பேராயர்.
நலஆதரவு மற்றும் கல்விக்கென செலவிடும் தொகையை விட அதிக அளவில் வெளிநாட்டுக் கடனுக்கென செலவளிக்கும் நாடுகளில் 330 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்துவருவதாகவும் புள்ளிவிவரங்களை வெளியிட்டார் திருப்பீட பிரதிநிதி பேராயர் பலஸ்த்ரேரோ .
வெளிநாட்டுக்கடன் அகற்றுதல் குறித்து தன் உரையில் வலியுறுத்திப் பேசிய பேராயர், மனித மாண்புக்கும் பொதுநலனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தல், கடன் கொடுத்தலிலும் பெறுவதிலும் நன்னெறிக் கடமைகள், நீதிக்கான மதிப்பு, உலக அளவிலான ஒருமைப்பாடு போன்றவைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்