குழந்தைகள் அனைத்து அடிமைத்தனங்களில் இருந்தும் விடுவிக்கப்பட....
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இன்றைய நிலையில் உலகில் பத்துக்கு ஒரு சிறார் சுரண்டல் நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதால், இது குறித்து நாம் விவாதிக்க வேண்டிய அவசரத்தேவை உள்ளது என ஐ.நா.வில் உரையாற்றினார் திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் கபிரியேலே காச்சா.
சிறார் தொழில் முறை என்பது தன் அனைத்து நிலைகளிலும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற தலைப்பில் ஐ.நா.வில் இடம்பெற்றுவரும் கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி, பாலகர்கள் எம்முறையில் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும் என பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் திருத்தந்தை 13ஆம் லியோ அவர்கள் கூறியதையும் மேற்கோள் காட்டினார்.
மனித குடும்பத்திற்கு கடவுளால் வழங்கப்பட்ட மிகச் சிறந்த கொடையான ஒவ்வொரு குழந்தையும் அதன் மாண்பு மதிக்கப்படும், அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும், ஒன்றிணைந்த வளர்ச்சி ஊக்குவிக்கப்படும் சூழலில் வளர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் திருப்பீடம், பன்னாட்டு அர்ப்பணங்கள் இருப்பினும் பாலர் தொழிலாளர் முறை தொடர்வது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிடுகிறது என்றார் ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி.
குழந்தைகளின் மாண்பையும் அடிப்படை உரிமைகளையும் அப்பட்டமாக மீறும் வகையில், சிறார் ஆயுத மோதல்களுக்கென திரட்டப்படுவது குறித்து திருப்பீடம் ஆழ்ந்த கவலை கொள்வதாக உரைத்த பேராயர் காச்சா அவர்கள், இத்தகைய நிலைகளில் பாலர் பருவத்தினர் போர்க்களத்தில் வன்முறைகளுக்கும் சுரண்டல்களுக்கும் உட்படுத்தப்படுவது மட்டுமல்ல, கட்டாயத் திருமணங்கள், பாலியல் அத்துமீறல்கள் உட்பட பல்வேறு உரிமை மீறல்களுக்கு அவர்கள் உட்படுத்தப்படுவதாக மேலும் தெரிவித்தார்.
இத்தகைய உரிமை மீறல்களுக்கு உட்படுத்தப்படும் குழந்தைகள் அனைவரும் விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு கருணையும், அக்கறையும், நம்பிக்கையும் ஊட்டப்பட வேண்டும் என திருப்பீடம் அழைப்பு விடுப்பதாகவும் கூறினார் பேராயர் காச்சா.
மாற்றுத்திறனாளி குழந்தைகள் குறித்தும் திருப்பீடத்தின் அக்கறையை வெளியிட்ட பேராயர், அவர்கள் சமூகத்தின் அங்கமாக இணைக்கப்பட்டு அவர்களுக்கான பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
பாலர் தொழிலாளர் முறை என்ற அநீதியை அகற்றி அனைத்து குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக அனைத்து நாடுகளும் உழைக்க வேண்டும் எனவும், குழந்தைகளின் நல ஆதரவுத் திட்டங்கள், கல்வி, அவர்களுக்கான வாய்ப்புகள் போன்றவை மூலம் அவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கென உழைக்க வேண்டும் எனவும் திருப்பீடம் விண்ணப்பிப்பதாக தன் உரையின் இறுதியில் மீண்டும் வலியுறுத்தினார் பேராயர் காச்சா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்