MAP

பல்சமய உரையாடல் திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு. பல்சமய உரையாடல் திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு. 

புத்தம் மற்றும் கிறிஸ்தவத்தின் எட்டாவது கூட்டத்தொடர்

இணக்கம் மற்றும் மீள்தன்மை ஆகிய இரண்டும், நமது பொதுவான மனிதகுலத்தின் கட்டமைப்பை அச்சுறுத்தும் பிரிவினை மற்றும் அழிவின் கலாச்சாரத்திற்கு ஒரு சக்திவாய்ந்த மருந்தை வழங்குகின்றன.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நாம் வாழ்கின்ற இந்த உலகமானது வன்முறையால் பிளவுபட்டுள்ளது, போர் மோதல்களால் வடுக்கள் நிறைந்ததாகவும் உள்ளது, அநீதி, வறுமை, சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவற்றால் சுமையாக இருக்கின்றது என்றும், இத்தகையக் காலகட்டத்தில் ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் கூட்டமானது எதிர்நோக்கின் ஆற்றல் மிக்க அடையாளமாகத் திகழ்கின்றது என்றும் கூறினார் கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு.

மே 27 செவ்வாய் கம்போடியாவின் phnom penh கத்தோலிக்க மேய்ப்புப்பணி நிலையத்தில் நடைபெற்ற எட்டாவது புத்த மற்றும் கிறிஸ்தவ கூட்டத்தொடருக்கான தொடக்கவிழாவில் அனைவரையும் வரவேற்று இவ்வாறு எடுத்துரைத்தார் பல்சமய உரையாடல் திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு.

இணக்கம் மற்றும் மீள்தன்மை ஆகிய இரண்டும், நமது பொதுவான மனிதகுலத்தின் கட்டமைப்பை அச்சுறுத்தும் பிரிவினை மற்றும் அழிவின் கலாச்சாரத்திற்கு ஒரு சக்திவாய்ந்த மருந்தை வழங்குகின்றன.

மேலும்,  இந்த ஆன்மிக புதையல்கள் குணப்படுத்தும் கைவினைஞர்களாகவும், உறவுகளை சரிசெய்பவர்களாகவும், மத, கலாச்சார மற்றும் சமூக எல்லைகளுக்கு அப்பால் நல்லிணக்கத்தை விதைப்பவர்களாகவும் மாற நம்மை அழைக்கின்றன என்றும் கூறினார் கர்தினால் கூவக்காடு.

நம்பிக்கை, பகிரப்பட்ட பொறுப்புணர்வுடன் ஒன்றுபட்டு,  நம்மைச் சுற்றிலும் நடக்கும் துயரங்களை நினைவில் கொண்டு, அமைதியற்ற உலகிற்கு பல்சமயத்தின் குணமளிக்கும் ஆற்றலுக்கு சான்று பகர நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று எடுத்துரைத்தார் கர்தினால் கூவக்காடு.

வன்முறை, முன்தீர்மானம்,  மற்றும் சமத்துவமின்மையால் ஏற்படும் துன்பத்தின் எதார்த்தம் மறுக்க முடியாதது என்றும், இடம்பெயர்ந்தோர், சுரண்டப்பட்டோர் மற்றும் ஓரங்கட்டப்பட்டோரின் அழுகைகளுக்கு ஒருவர் ஆளாகும்போது அடிக்கடி நிகழும் மௌனமும் அலட்சியமும் உண்மையானது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் கூவக்காடு.

புலம்பெயர்ந்தோரின் அவலநிலை, தீவிரமடைந்து வரும் காலநிலை நெருக்கடி, மனித மாண்பு அழிக்கப்படுவது போன்றவை இரக்கம் மற்றும் தார்மீக கடமையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பதிலை கொடுக்க அழைக்கின்றன என்று எடுத்துரைத்த கர்தினால் கூவக்காடு அவர்கள், இந்த அழைப்புக்கு பதிலளிக்க நம்பிக்கையோ அடிப்படை வளமோ நம்மிடம் இல்லாமல் இல்லை, மாறாக நமது கலந்துரையாடல்கள், அமைதியைக் கட்டியெழுப்பும் நேர்மறையான கதைகளைக் கேட்கவும் அதிகரிக்கச் செய்யவும் மதிப்புமிக்க வாய்ப்புகளை வழங்குகின்றன என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 மே 2025, 14:03