MAP

கர்தினால்கள் அவைக் கூட்டம் கர்தினால்கள் அவைக் கூட்டம்  (@Vatican Media)

பாலங்களையும் சீர்திருத்தங்களையும் முன்வைக்கும் கர்தினால்கள்

புதிய திருத்தந்தை ஒரு வழி நடத்தும் ஆயராகவும், பாலங்களைக் கட்டியெழுப்புபவராகவும், மனித நேயத்தின் தலைவராகவும், சமாரியத் திருஅவையின் முகத்தை வெளிப்படுத்துபவராகவும் செயல்பட எதிர்பார்ப்பு.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

புதிய திருத்தந்தைக்கான தேர்தல் வாக்கெடுப்பு குறித்தவைகளில் தயாரிப்புக்களை மேற்கொண்டுவரும் கர்தினால்கள் அவை தன் இறுதி தயாரிப்புக் கூட்டத்தை மே 6ஆம் தேதியன்று நிறைவு செய்தது.

திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 130 கர்தினால்களையும் சேர்த்து 173 கர்தினால்கள் இந்த 12வது கர்தினால்கள் அவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, ஆயராக வழிநடத்தல், பாலங்களைக் கட்டுபவராகச் செயல்படுதல், சீர்திருத்தங்களை ஊக்குவிப்பவராக இருத்தல் போன்ற, புதிய திருத்தந்தைக்கு இருக்க வேண்டிய பல்வேறு குணங்கள் குறித்து விவாதித்தனர்.

செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்ற கூட்டத்தில் 26 பேர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள, அவை யாவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கிய சீர்திருத்தங்கள் தொடரவேண்டும் என்பதை மையமாக வைத்து, பாலியல் அத்துமீறல்கள், பொருளாதார விவகாரங்கள், வத்திக்கான் தலைமைத் துறைகள், ஒன்றிணைந்து நடைபோடுதல், அமைதி நோக்கிய பணிகள், படைப்பின் மீது அக்கறை போன்றவை குறித்து கருத்துப் பரிமாற்றங்களாக இருந்தன.

புதிய திருத்தந்தை ஒரு வழி நடத்தும் ஆயராகவும், பாலங்களைக் கட்டியெழுப்புபவராகவும், மனித நேயத்தின் தலைவராகவும், சமாரியத் திருஅவையின் முகத்தை வெளிப்படுத்துபவராகவும், போர், வன்முறை மற்றும் ஆழமான துருவப்படுத்தல் காலத்தின்போது கருணை, ஒன்றிணைந்து நடைபோடல் மற்றும் நம்பிக்கையின் திருத்தந்தையாக செயல்பட வேண்டியது குறித்தும் கர்தினால்களால் விவாதிக்கப்பட்டது.

மேலும், திருஅவைச் சட்டங்களும் திருத்தந்தையின் அதிகாரமும், திருஅவையில் கர்தினால்களின் பங்கு, கிறிஸ்து அரசர் திருவிழாவும் உலக ஏழைகள் தினமும், கர்தினால்கள் நியமனங்களின்போது கர்தினால்கள் அவையின் கூட்டம், மத சுதந்திரம் ஒடுக்கப்பட்ட பகுதிகளில் மறைப்பணிகள், கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவை ஒன்றிணைந்து கொண்டாடுதல், கிறிஸ்தவ சபைகளுடன் உரையாடல், காலநிலை மாற்றம் குறித்தவைகளில் அவசரமாகச் செயல்படுதல் போன்றவை குறித்தும் கர்தினால்கள் அவை விவாதித்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 மே 2025, 16:08