புனித வியாழன் திருஎண்ணெய் மந்திரிப்பு திருப்பலி
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும், நம்மிடையே இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து உடன் பிறந்த உணர்வுடன் வாழவும், தாழ்ச்சி நிறை மனதுடன் இறைத்திருவுளத்திற்குப் பணிந்து நடக்கவும் இறைமகன் இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்தார். திருஎண்ணெய் மந்திரிப்பு, பாதம் கழுவுதல், குருத்துவம், திருநற்கருணை ஆராதனை ஆகியவற்றிற்காக சிறப்பான விதமாக அர்ப்பணிக்கப்பட்ட இந்த பெரிய வியாழன் என அழைக்கப்படும் புனித வியாழன் வாழ்த்துக்களை வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம். இன்றைய நம் ஒலிபரப்பில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற திருஎண்ணெய் மந்திரிப்பு திருப்பலி பற்றியும் அத்திருப்பலியில் எடுத்துரைக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைக் கருத்துக்கள் பற்றியும் இன்றைய நம் நிகழ்வில் நாம் அறிந்துகொள்ளலாம்.
ஏப்ரல் 17, புனித வியாழனன்று உரோம் உள்ளூர் நேரம் காலை 9.30 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் திருஎண்ணெய் மந்திரிப்பு சடங்குத் திருப்பலியானது நடைபெற்றது. இத்திருப்பலியினைத் திருத்தந்தை சார்பாக கர்தினால் Domenico Calcagno அவர்கள் தலைமையேற்று வழிநடத்தினார். இயேசு தம் பாடுகளின் துவக்கமான சிலுவை மரணத்தை ஏற்பதற்கு முந்தைய நாளன்று தம் சீடர்கள் பன்னிருவரோடு இறுதி இரவுணவு அருந்தினார். அதன் வழியாக குருத்துவத்தின் மேன்மையினையும், திருநற்கருணையின் மகத்துவத்தையும் இவ்வுலகிற்கு எடுத்துரைத்தார். திருத்தூதர்களின் காலடிகளைக் கழுவியதன் வழியாக இறைப்பணி செய்பவர்கள், இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றத் தயாராக இருப்பவர்கள் அனைவரும், இயேசுவைப்போல பணிவிடைபெறுவதற்கு அன்று பணிவிடைபுரிபவர்களாக வாழ வலியுறுத்தினார் இயேசு. இத்தகைய சிறப்புமிக்க புனித வியாழனை பொருளுள்ள வகையில் பயன்படுத்த ஏராளமான அருள்பணியாளர்கள் வத்திக்கானில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினர்.
திருஎண்ணெய் மந்திரிப்பு திருப்பலிக்கான வருகைப்பாடல் பாடப்பட்டதும், பீடப்பணியாளர்கள், அருள்பணியாளர்கள், ஆயர்கள், கர்தினால்கள் அனைவரும் பெருங்கோவிலின் முகப்பில் இருந்து பவனி வர கர்தினால் Domenico Calcagno அவர்கள் சிலுவை அடையாளம் வரைந்து திருப்பலியினைத் துவக்கினார். அதன்பின் வானவர் கீதம் பாடப்பட்டதைத் தொடர்ந்து முதல் வாசகம் இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்தும் இரண்டாம் வாசகம் திருத்தூதர் யோவான் எழுதிய திருமுகத்திலிருந்தும் இத்தாலிய மொழியில் வாசிக்கப்பட்டது. லூக்கா நற்செய்தியில் இருந்து நாசரேத்தில் இயேசு தொழுகைக்கூடத்தில் இறைவாக்கினர் எசாயாவின் மறைநூலை வாசித்தது குறித்த நற்செய்தி வாசகமானது அருள்பணியாளர் ஒருவரால் வாசித்தளிக்கப்பட்டது. அதன்பின் கர்தினால் Domenico Calcagno அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைக் கருத்துக்களை இறைமக்களுக்கு எடுத்துரைத்தார்.
திருத்தந்தையின் மறையுரைக் கருத்துக்கள்
அன்பான ஆயர்களே அருள்பணியாளர்களே,“அகரமும் னகரமும் நானே, இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் இயேசுவே”. (திருவெளிப்பாடு 1:8) நற்செய்தியாளர் லூக்கா எடுத்துரைப்பது போல, நாசரேத் ஊர் தொழுகைக்கூடத்தில் மறைநூலை வாசித்த இயேசுவை சிறுவயதிலிருந்தே அந்த ஊரில் இருந்தவர்கள் நன்கு அறிந்தவர்கள். எனவே தான் "இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" என்று இயேசு கூறியதும் அவர்களால் அதனை ஏற்கமுடியவில்லை. திருவிவிலியத்தின் இறுதி நூலாகிய திருவெளிப்பாடு எதிர்நோக்கை எடுத்துரைக்கும் வகையில் இயேசுவின் உடல், நமது உடல் என்று வரையறுக்கின்றது. திருத்தூதர்களுக்கு இருந்த எல்லாவிதமான அச்சங்களையும், அன்பின் சிலுவை என்னும் சூரியனில் உருகவைத்து, எல்லாரும் படிக்கும் வகையில் புதிய வரலாற்றுப் புத்தகத்தை திறக்கின்றார் இயேசு என்றும் வலியுறுத்துகின்றது.
புனித வியாழனன்று குருத்துவ வாக்குறுதிகளைப் புதுப்பிக்கும் அருள்பணியாளர்களுக்கும் ஒரு வரலாற்றுக் கதை உண்டு. நம்மீது அன்புகூர்ந்து, தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்த நாசரேத்தூர் இயேசுவில் மட்டுமே அதனை நாம் படிக்க முடியும். அன்று மறைநூல் சுருளைப் பிரித்து இறைவாக்கினர் எசாயாவின் இறைவார்த்தைகளை வாசித்த இயேசு, இன்று, நமது வாழ்க்கை என்னும் சுருளைத் திறந்து, நமது வாழ்வின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்தும் பகுதிகளைக் கண்டுபிடிக்க நமக்குக் கற்பிக்கின்றார். நமக்கு கற்பிக்க இயேசுவை நாம் அனுமதிக்கும்போது நமது வாழ்வும் பணியும், எதிர்நோக்கின் பணியாக மாறுகின்றது. ஏனெனில், நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் இயேசு யூபிலியை, அருளின் சோலையை, அருளின் காலத்தைத் திறக்கின்றார். நமது வாழ்வை நாம் படிக்கக் கற்றுக்கொண்டிருக்கின்றோமா? அல்லது அதனைச் செய்ய அச்சமுற்றவர்களாக இருக்கின்றோமா? என்று நமக்குள் நாம் கேட்டுக்கொள்வோம்.
யூபிலி என்னும் அருளின் காலம்
நமது வாழ்வில் யூபிலி என்னும் அருளின் காலம் தொடங்கும்போது நம்முடன் வாழும் எல்லா மக்களும் ஆறுதலைக் காண்கின்றனர். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்ல, நீதி மற்றும் அமைதி பற்றிய இறைவாக்குகள் நிறைவேறும் ஒவ்வொருமுறையும் அருளின் காலமாகிய யூபிலியை நாம் சிறப்பிக்கின்றோம். அக்காலத்தில் அருள்பணியாளர்களுக்கு மட்டுமன்று அவருடன் வாழும் மக்களுக்கும் இறைவனின் அருள் நிறைவாகக் கிடைக்கின்றது. “ஆட்சி உரிமை பெற்றவர்களாக, அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினார்” என்பதற்கேற்ப அருள்பணியாளர்கள் இறைவனின் மக்களாகத் திகழ்கிறார்கள். கடவுளின் மாட்சியே அம்மக்கள் வாழும் நகரின் ஒளி; ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு. மக்களினத்தார் அதன் ஒளியில் நடப்பர்; மண்ணுலக அரசர்கள் தங்களுக்குப் பெருமை சேர்ப்பவற்றையெல்லாம் அங்குக் கொண்டு செல்வார்கள். அதன் வாயில்கள் நாள் முழுவதும் திறந்திருக்கும். அங்கு இரவே இராது. உலகின் பெருமையும் மாண்பும் எல்லாம் அங்குக் கொண்டு செல்லப்படும். இதனை எடுத்துரைக்கும் விதமாகவே இயேசு, அருள்பணித்துவ மக்களின் பணியையும் வாழ்வையும் சுட்டிக்காட்டும் வகையில் மறைநூலை தொழுகைக்கூடத்தில் வாசிக்கின்றார்.
யூபிலி ஆண்டு என்பது, மனமாற்றத்தின் அடையாளமாக, நமது வாழ்வை மீண்டும் துவக்க நமக்கு அழைப்புவிடுக்கின்றது. எதிர்நோக்கின் திருப்பயணிகளாக நம்பிக்கையை எடுத்துரைக்கும் அறிவிப்பாளர்களாக நாம் மாற நமக்கு வலியுறுத்துகின்றது. இயேசுவே நமது வாழ்வின் அகரமும் னகரமும், தொடக்கமும் முடிவும் என்பதை உணர்ந்து வாழ்வோம். தனது மந்தையை அன்பு செய்யும் ஆயனாக இயேசு இருக்கின்றார். அன்பின் உண்மைத்தன்மை நம்மில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஏழைகள் தான் அதை முதலில் அடையாளம் காண்கிறார்கள், இந்த அடையாளம் மெதுவாக குலைத்து மற்றவர்களையும் ஈர்க்கிறது. “இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்; அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்; அவர்பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை, ஆமென்!” (திருவெளிப்பாடு 1,7).
வாழ்வில் நிறைவேற்ற வேண்டிய இறைவார்த்தை
"ஆம்" என்று ஆண்டவருக்கு நாம் கொடுத்த வாக்குறுதி பாறை போன்று உறுதியானது. இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவை திருஅவையையும், குருத்துவத்தையும் உறுதியாக ஆதரிக்கும் நிலம் போன்றது. இந்நிலத்தில் நாம் பூத்துக் குலுங்க முடியும். “இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்” (லூக்கா 4:16). என்னும் இறைவார்த்தைகள் அவர் தொழுகைக்கூடத்திற்கு செல்லும் பழக்கமுடையவர் இறைவார்த்தையை வாசிக்கும், எடுத்துரைக்கும் பழக்கம் உடையவர் என்பதை வலியுறுத்துகின்றது. நமது வாழ்க்கை நல்ல பழக்கவழக்கங்களால் நிறைந்துள்ளதா? அவை வறண்டு நம் இதயத்தை வறட்சி அடையச்செய்கின்றதா? என்று சிந்திப்போம். நம் இதயம் எங்கிருக்கிறது என்பதை நமது பழக்கங்கள் எடுத்துரைக்கின்றன. இயேசுவின் இதயம் கடவுளுடைய வார்த்தையின் மீதுள்ள அன்பினால் மூழ்கியிருந்தது என்பதை அவர் தனது பன்னிரண்டு வயதிலேயே எடுத்துரைத்தார். இப்போது இளைஞராக தனது தந்தையின் இல்லத்திற்கு வந்து இறைவார்த்தைகளை எடுத்துரைக்கின்றார். மறைநூலை நன்கு கற்றறிந்த பழக்கம் உடையவராலே, தோராவின் பக்கங்களில் தான் விரும்பியவற்றை எடுத்து வாசிக்க முடியும். இயேசு தனது வாழ்வை எடுத்துரைக்கும் பகுதியையே வாசிக்கின்றார்.
அருள்பணியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது வாழ்வில் நிறைவேற்ற வேண்டிய ஓர் இறைவார்த்தை உள்ளது. தூரத்திலிருந்து வரும் கடவுளின் வார்த்தையுடன் நம் ஒவ்வொருவருக்கும் ஓர் உறவு இருக்கிறது. திருவிவிலியத்தை நமது முதல் இல்லமாக நாம் வைக்கும்போது மட்டுமே, அதை அனைவருக்கும் அவரது பணியில் நாம் நம்மை வைத்து செயல்பட முடியும். நம் உள்ளத்தில் நம் ஒவ்வொருவருக்கும் நமக்கு மிகவும் பிடித்த அழகானதும் முக்கியமானதுமான சில வாழ்க்கையின் பக்கங்கள் உள்ளன. மற்றவர்களும் தங்கள் வாழ்க்கையின் இத்தகைய அழகான பக்கங்களைக் கண்டறிய நாம் உதவவேண்டும். திருமணம் என்னும் திருவருளடையாளம் வழியாக இணைய இருக்கும் திருமணத் தம்பதியரின், திருமணத் திருப்பலிக்கான வாசகங்கள், அன்புக்குரியவர்களை இழந்து வருந்தும் மக்களுக்கு ஆறுதலையும் இறைவனின் எல்லையற்ற இரக்கத்தையும் எடுத்துரைக்கும் இறந்தோர் திருப்பலி வாசங்கள் போன்றவற்றைத் தேர்வு செய்து அவர்களது வாழ்வின் சிறப்பான பக்கங்களைக் கண்டறிய உதவலாம். நம் ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கத்தில், ஒரு அழைத்தல் பக்கம் இருக்கும். நமது அழைத்தலை நாம் பாதுகாப்பதன் வாயிலாக கடவுள் நம்மை அன்பு செய்து ஒவ்வொரு நாளும் நம்மை அவர் அழைக்கிறார் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
நம் ஒவ்வொருவருக்கும், இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை பக்கமும் முக்கியமானது, மேலும் ஒரு சிறப்பு வழியில் நாம் அவரைப் பின்பற்றுகிறோம். “ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்” (லூக்கா 4:17-20) என்று இயேசு வாசித்த ஆவியின் ஆற்றலுள்ள வார்த்தைகள் நமது வாழ்வாக வேண்டும். இத்தகைய ஆவியின் ஆற்றலை அருள்பணியாளர்கள் அனைவரும் பெற வேண்டும். ஆவியின் பணி அமைதியான வகையில், செயல்படுகின்றது. இறைவனின் வார்த்தைகள் எதார்த்தமாக மாறும்போது மக்கள் தூய ஆவியின் மூச்சுக்காற்றை நம்மில் உணர்கிறார்கள். நற்செய்தி அறிவிப்பிற்கும் வாழ்க்கைக்கும் இடையிலான தற்செயல் நிகழ்வில் தூய ஆவியின் செயலை அடையாளம் காண்கிறார்கள். இதனால் அருள்பணியாளர்கள் நிறைவேறிய ஓர் இறைவாக்காக மாறுகின்றார்கள்.
கடவுளை நம்புபவர்கள் கைவிடப்பட மாட்டார்கள்
இறைப்பணியில் கிறிஸ்துவை எடுத்துரைக்கும் பணியில் கவனமாக இருப்போம். ஒருபோதும் சோர்வடைய வேண்டாம், ஏனென்றால் நாம் செய்யும் பணி கடவுளின் பணி. அதனை நன்முறையில் செய்ய அவரே ஆற்றல் தருவார். கடவுள் நம்மை ஒருபோதும் கைவிட மாட்டார் என்று நம்புவோம். ஏனெனில், கடவுளை நம்புபவர் ஒருபோதும் தோல்வியடைவதில்லை. "உங்களில் தொடங்கிய வேலையை கடவுள் நிறைவு செய்யட்டும்" என்ற கட்டளையை நாம் நினைவில் கொள்வோம். அறுவடை எவ்வளவு மிகுதியாக இருக்கிறது என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். நாம் தொழிலாளர்கள் அறுவடைக்கான உழைப்பையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறோம். அறுவடைக் களம் என்பது மிகவும் காயமடைந்த நமது பொதுவான இல்லமாகிய இவ்வுலகம். இந்த உலகில் அனைவருடனும் மனித உடன்பிறந்த உணர்வுடன் வாழ நம்மை அழைக்கின்றார் இறைவன். கடவுளின் அறுவடை அனைவருக்கும் உரியது. விதைக்கப்பட்டதை விட நூறு மடங்கு அதிகமாக வளரும் ஒரு உயிருள்ள வயலாக நாம் மாறவும், நாம் செய்கின்ற ஒவ்வொரு முயற்சிக்கும் பலனளிக்கும் இறையரசின் மகிழ்ச்சியானது, நமது பணியில் நம்மை ஊக்குவிக்கவும் அருள்வேண்டுவோம். அருள்பணியாளர்களின் மகிழ்ச்சிக்காக செபிப்போம்.
திருஎண்ணெய் மந்திரிப்பு
இவ்வாறு திருத்தந்தையின் மறையுரைக் கருத்துக்களை கர்தினால் Domenico Calcagno அவர்கள், எடுத்துரைத்தபின் அருள்பணியாளர்கள் தங்களது குருத்துவ வாக்குறுதிகளைப் புதுப்பித்தனர். அதனைத் தொடர்ந்து திருஎண்ணெய் மந்திரிப்பு சடங்கானது நடைபெற்றது. திருமுழுக்கு, நோயில்பூசுதல், உறுதிப்பூசுதல், குருத்துவம் ஆகிய திருவருளடையாளச் சடங்கின்போது பயன்படுத்தப்படும் இந்த திருஎண்ணெய்கள் நறுமணம் கலந்த ஒலிவ எண்ணெய்களாகும். திருஎண்ணெய்கள் மனிதனைப் புனிதமாக்குபவை. இறைவனின் திருவருளை நமக்கு அளித்து புனிதத்தன்மைக்கு மாற்றுபவை. குணப்படுத்துதலை, நலத்தை, வலிமையை, வல்லமையை, ஆற்றலை, மகிழ்ச்சியை, ஆனந்தத்தை நமக்கு அளிப்பவை. புனித அகுஸ்தீன் கூறுவது போல, “நம் கண்களுக்கு மறைவாக இருக்கின்ற கடவுளின் அருளை காணக்கூடிய அருளாக பெறுவதற்கு உதவுபவை திருஎண்ணெய்கள். நோயாளர்களுக்கான எண்ணெய், கிறிஸ்மா எண்ணெய், catechumens ஆயத்த எண்ணெய் ஆகியவை கிறிஸ்துவின் அருளை தூயஆவியின் உடனிருப்பைப் பிரசன்னைத்தை நமக்கு அளிக்கும் இத்திரு எண்ணெய்களை கர்தினால் தொமேனிக்கோ அவர்கள் மந்திரித்தார். அதன்பின் காணிக்கப்பவனியைத் தொடர்ந்து திருநற்கருணை வழிபாடானது ஆரம்பமானது.
ஏறக்குறைய 4300 இறைமக்கள் கூடியிருந்த வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் அருள்பணியாளர்கள் 1800 பேர் இறைமக்கள் 2500 பேர் திருஎண்ணெய் மந்திரிப்பு திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்றனர். கர்தினால் Domenico Calcagno அவர்கள் திருப்பலியின் நிறைவில் இறுதி ஆசீரினை வழங்கினார். அன்னை மரியின் பாடலுடன் திருப்பலியானது நிறைவுற்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்