திருஅவையில் கர்தினால்கள் குறித்த விவரம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருத்தந்தையின் அடக்கச் சடங்கு வரும் சனிக்கிழமை, ஏப்ரல் 26 அன்று இடம்பெற்ற சில நாட்களுக்குப்பின் உலகின் 80 வயதிற்குட்பட்ட கர்தினால்கள் வத்திக்கானில் கூடி அடுத்த திருத்தந்தையை தேர்ந்தேடுக்கும் வாக்களிப்பில் கலந்துகொள்வர். அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய, அதாவது 80 வயதிற்குட்பட்ட கர்தினால்கள் இன்று திருஅவையில் 135 பேர் உள்ளனர். திருஅவையில் இன்று 252 கர்தினால்கள் இருக்கின்றபோதிலும், இவர்களில் 117 பேர் 80 வயதிற்கும் மேற்பட்டவர்கள். அதாவது, திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்க முடியாது என்பது திருஅவை விதி. இந்திய கர்தினால்கள் 6 பேர் இருப்பினும், திருத்தந்தைக்கான தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் நான்கு பேரே ஆகும்.
கோவா-டாமன் பேராயர்-கர்தினால் பிலிப் நேரி பெராவ், கேரளாவின் சீரோ மலங்கரா வழிபாட்டுமுறை திருஅவைத் தலைவர் கர்தினால் பசேலியேஸ் கிளிமீஸ், ஹைதராபாத் பேராயர்-கர்தினால் ஆன்டனி பூலா, வத்திக்கானில் பணிபுரியும் கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு ஆகியோரே இந்த நால்வராவர். மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியாஸ் 2024 டிசம்பர் 24ஆம் தேதியும், கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி இவ்வாண்டு ஏப்ரல் 19ஆம் தேதியும், அதாவது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரும் 80 வயதை எட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று உலகில் வாழும் 252 கர்தினால்களுள் 114 பேர் ஐரோப்பாவையும், 37 பேர் ஆசியாவையும், 32 பேர் தென் அமெரிக்காவையும், 29 பேர் ஆப்ரிக்காவையும் 28 பேர் வட அமெரிக்காவையும் 8 பேர் மத்திய அமெரிக்காவையும், 4 பேர் ஓசியானியாவையும் சேர்ந்தவர்கள். ஐரோப்பாவைச் சேர்ந்த கர்தினால்களுள் 46.5 விழுக்காட்டினரும், ஆசியாவைச் சேர்ந்த கர்தினால்களுள் 62.2 விழுக்காட்டினரும், வட அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால்களுள் 57.1 விழுக்காட்டினரும், மத்திய அமெரிக்காவில் உள்ளோருள் 50 விழுக்காட்டினரும், தென் அமெரிக்காவில் உள்ளோருள் 53.1 விழுக்காட்டினரும், ஆப்ரிக்காவின் 62.1 விழுக்காட்டினரும், ஓசியானியாவின் நூறு விழுக்காட்டினரும் 80 வயதிற்குட்பட்டவர்கள், அதாவது திருத்தந்தையை தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் தகுதிப் பெற்றவர்கள்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டவர்களுள் 148 பேர் தற்போது உயிர் வாழ்கின்றனர், இதில் 108 பேர் 80 வயதிற்குட்பட்டவர்கள். திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டு, தற்போது உயிரோடு இருக்கும் 62 பேரில் 22 பேரே 80 வயதிற்குட்பட்டவர்கள். 20 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டு தற்போது உயிரோடு இருக்கும் 41 கர்தினால்களுள் 5 பேரே 80 வயதிற்குட்பட்டவர்கள். கர்தினால்கள் Vinko Puljić, Peter Turkson, Peter Erdö, Josip Bozanic, Philippe Barbarin ஆகியோரே இவர்கள். இவர்கள் ஐவர் மட்டுமே, திருத்தந்தையர்கள் பதினாறாம் பெனடிக்ட், திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலில் பங்குபெற்றதோடு, அடுத்த திருத்தந்தைக்கான தேர்தலிலும் பங்கெடுக்க உள்ளனர். அதாவது, அடுத்த திருத்தந்தைக்கான தேர்தலில் பங்கெடுக்க உள்ளோரில் 108 பேர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினால்களாக உயர்த்தப்பட்டவர்களாகவும், 22 பேர் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டவர்களாகவும், 5 பேர் புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டவர்களாகவும் இருப்பர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப்போல், பழமையையும் புதுமையையும் அரவணைத்து இயற்கையின் மீதும் ஏழைகள் மீதும் அன்பு கொண்ட ஒரு திருத்தந்தை, தொடர்ந்து இவர் வழியில் நடைபோட வேண்டும் என இறைவனை நோக்கி செபிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்