உக்ரைனுக்கு மருத்துவ உதவிக்கருவிகள் அடங்கிய வாகனங்கள் அன்பளிப்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
போரினால் பாதிக்கப்பட்டு துன்புறும் உயிர்களைக் காப்பதற்காக உக்ரைன் நாட்டிற்கு மருத்துவ உதவிக் கருவிகளைக் கொண்ட 4 (ஆம்புலன்ஸ்) மருத்துவ வாகனங்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நன்கொடையாக வழங்கியுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் கர்தினால் Konrad Krajewski.
ஏப்ரல் 7, திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் திருப்பீடத்தின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski அவர்கள், போரினால் மூடும் உலகின் கதவுகளை, வாழ்க்கைக் கதவுகளை, இயேசுவே திறக்கின்றார் என்றும், இருளில் வாழும் மக்களுக்கு உயிர்ப்பின் ஒளியைக் கொண்டு வரும் செயலாக இது இருக்கின்றது என்றும் கூறினார்.
மனிதகுலத்திற்கு வேதனையையும் அவமானத்தையும் ஏற்படுத்தும் வகையில் மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் போர், மிகவும் வேதனையான சூழல்களை உருவாக்குகின்றது என்றும், துன்புறும் உக்ரைன் மக்களுடன் தனது ஆன்மிக உடனிருப்பை வெளிப்படுத்தும் விதமாக திருத்தந்தை திருப்பீடத்தின் பிறரன்பு பணிகள் வாயிலாக இவ்வுதவிகளை ஆற்றுகின்றார் என்றும் எடுத்துரைத்துள்ளார் கர்தினால் Krajewski.
உக்ரைனில் இருந்து வந்த மற்ற 3 வாகன ஓட்டுநர்களின் உதவியுடன், கர்தினால் Krajewski அவர்கள் மருத்துவ உதவிப்பொருள்கள் அடங்கிய வாகனங்களுடன் விரைவில் உக்ரைன் செல்ல இருக்கின்றார். மோதலால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுடன் தங்கி இருக்கவும், அவர்களுடன் இணைந்து செபிக்கவும், திருத்தந்தையின் உடனிருப்பை வெளிப்படுத்தும் விதமாகவும் உக்ரைன் செல்ல இருக்கின்றார் கர்தினால் Krajewski.
பத்தாவது முறையாக உக்ரைன் செல்ல இருக்கும் கர்தினால் Krajewski அவர்கள், எதிர்நோக்கு ஏமாற்றம் தராது என்பதை வலியுறுத்தும் யூபிலி ஆண்டில் மேற்கொள்ள இருக்கும் இப்பயணம் போரினால் துயரத்தில் மூழ்கியுள்ள மக்களுக்கு நம்பிக்கையை வழங்கும் எதிர்நோக்கின் அடையாளமாக இருக்கின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
எதிர்நோக்கின் அடையாளம், உலக அமைதியை வலியுறுத்துகின்றது அமைதிக்கான தேவையை உணர்த்தி சவால் விடுகிறது, உறுதியான திட்டங்களைத் தொடர்வதை அவசியமாக்குகிறது என்றும், கிறிஸ்துவில் நிலைத்து நிற்கும் யூபிலியின் அடையாளமாக 4 மருத்துவ உதவிக் கருவிகள் கொண்ட வாகனம் திகழ்கின்றது என்றும் கூறினார்.
மூவேளை செப உரையின் இறுதியில் வழங்கும் செப விண்ணப்பங்களிலும், அமைதிக்கான விண்ணப்பங்களிலும் பாலஸ்தீனம், இஸ்ரயேல், மியான்மார், கிவ், சூடான் போன்ற பகுதி மக்களுக்காக செபிக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றார் என்றும் கூறினார் கர்தினால் Krajewski.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்