MAP

பேராயர் கபிரியேலே காச்சா பேராயர் கபிரியேலே காச்சா 

நடுத்தர வருமான நாடுகளின் வளர்ச்சிக்கு அதிக கடன் இல்லாத முதலீடு தேவை

“உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கிற்குப் பங்களித்தாலும், நடுத்தர வருமான நாடுகள் உலகின் 62 விழுக்காடு ஏழைகளுக்குத் தாயகமாக உள்ளன” : பேராயர் கபிரியேலே காச்சா

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

“நடுத்தர வருமான நாடுகள் கடன் இல்லாத நிதி உதவியை அணுக அனுமதிக்கப்பட வேண்டும் என்று திருப்பீடம் அழைப்பு விடுக்கிறது” என்றும், “இதனால் அவர்கள் கடன் அளவைப் பாதிக்காத அளவில் தங்கள் முழு திறனையும் அடைய முடியும்” என்று கூறினார் பேராயர் கபிரியேலே காச்சா.

நடுத்தர வருமான நாடுகள் குறித்த உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த ஐ.நா.விற்கானத் திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் கபிரியேலே காச்சா அவர்கள், உலகப் பொருளாதாரத்தில் அவற்றின் குறிப்பிடத்தக்க பங்கை மட்டுமல்லாமல் அவை எதிர்கொள்ளும் சவால்களையும் எடுத்துக்காட்டினார்.

“உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கிற்குப் பங்களித்தாலும், இந்த நாடுகள் உலகின் 62 விழுக்காடு ஏழைகளுக்குத் தாயகமாக உள்ளன” என்ற வருத்தத்தையும் தனது உரையில் பதிவு செய்தார் பேராயர் காச்சா.

உலக வங்கியால் வரையறுக்கப்பட்ட நடுத்தர வருமான நாடுகள், ஒரு நபருக்கு $1,100 முதல் $14,000 வரை மொத்த தேசிய வருமானம் (GNI) உள்ள நாடுகள் யாவும், மோதல்கள், பொருளாதார உறுதியற்ற தன்மை, காலநிலை மாற்றம் மற்றும் அதிக கடன் சுமைகளால் சிரமங்களை எதிர்கொள்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார் பேராயர்.

மேலும் இந்த நாடுகளின் கடனை அதிகரிக்காமல் நிலையான வளர்ச்சிக்காக வெளிநாட்டு முதலீடு தேவை என்பதை வலியுறுத்திய பேராயர், கடன் சுழற்சியில் சிக்கிக் கொள்ளும் ஆபத்தின்றி அவைகளின் வளர்ச்சியை ஆதரிக்க, கடன் இல்லாத நிதி உதவியை அதிகரிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

அதேவேளையில், நடுத்தர வருமான நாடுகளின் உண்மையான சவால்களைப் பிரதிபலிக்கத் தவறி, தேவையான வளங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்தும் மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற தற்போதைய வளர்ச்சி நடவடிக்கைகளையும் தனது உரையில் விமர்சித்தார் பேராயர் காச்சா.

முன்னேற்றத்தை சிறப்பாக மதிப்பிடுவதற்கும், அனைத்து நாடுகளின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப அனைத்துலக ஆதரவை வடிவமைப்பதற்கும், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார காரணிகளைக் கருத்தில் கொண்ட பரந்த பொருளாதார குறிகாட்டிகளைப் பயன்படுத்துவதைக் குறித்தும் அவர் வாதிட்டார்.

வளர்ச்சிக்கான நிதியுதவி தொடர்பான நான்காவது அனைத்துலக மாநாட்டை எதிர்பார்த்து, நாடுகளை கடனில் சிக்க வைக்காமல் நிலையான வளர்ச்சியை செயல்படுத்தும் நிதியுதவியை வழங்க வளர்ந்த நாடுகளை வலியுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார் பேராயர் காச்சா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 ஏப்ரல் 2025, 14:20