MAP

செனகல் டாக்காரில் இடம்பெற்ற கருத்தரங்கு செனகல் டாக்காரில் இடம்பெற்ற கருத்தரங்கு 

மத இணக்க வாழ்வுக்கு செனகல் நாடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு

பேராயர் காலகர் : ஒரே குடும்பத்தில் இஸ்லாமியர், கத்தோலிக்கர், பிரிந்த கிறிஸ்தவ சபையினர், பாரம்பரிய மதத்தினர் என உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வாழ்வது சென்கலில் பரவலாகக் காணப்படுவது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மதங்களின் அமைதியான இணக்க வாழ்வுக்கு செனகல் நாடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என, செனகல் தலைநகர் டாக்காரின் Cheikh Anta Diop பல்கலைக்கழகம் மத இணக்கவாழ்வு குறித்து ஏற்பாடுச் செய்திருந்த கருத்தரங்கிற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் பிறநாடுகளுடன் உறவுகளுக்கான திருப்பீடச் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

மதங்களிடையேயான உறவுகளின் மேலாண்மை என்ற தலைப்பில் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடுச் செய்த கூட்டத்தில் கலந்துகொள்ள இறுதி நேரத்தில் இயலாத நிலையில், செய்தி ஒன்றை அனுப்பியுள்ள  பேராயர் காலகர், மத இணக்க வாழ்வுக்கு செனகல் நாடு நல்லதொரு எடுத்துக்காட்டு என அதில் புகழ்ந்துள்ளார்.

அமைதியைக் கட்டியெழுப்புவதிலும் முரண்பாடுகளில் நடுநிலையாளராகச் செயல்படுவதிலும் கல்வி மற்றும் ஆன்மீகக் கட்டமைப்பு வழி மதங்களின் பங்கு என்பதை ஆராயும் நோக்கில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் செனகல் நாட்டிற்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் Waldemar Sommertag அவர்களும் பங்குபெற்றார்.

ஒரே குடும்பத்தில் இஸ்லாமியர், கத்தோலிக்கர், பிரிந்த கிறிஸ்தவ சபையினர், பாரம்பரிய மதத்தினர் என உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வாழ்வது மதங்களிடையே பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதாக உள்ளது என்பது மட்டுமல்ல, அது தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டியது என இக்கருத்தரங்கிற்கான செய்தியில் கூறியுள்ளார் பேராயர் காலகர்.

இவ்வுலகிற்கு தேவைப்படுவது இடைக்கால வன்முறை நிறுத்தம் அல்ல, மாறாக நீதியிலும், ஒருமைப்பாட்டிலும், ஒழுக்கரீதி உண்மையிலும் அடிப்படையைக் கொண்ட, நீடித்த நிலையான அமைதி என தன் செய்தில் அழைப்புவிடுக்கும் பேராயர், மத பாரம்பரியங்களிலிருந்து பெறப்படும் ஒழுக்க மற்றும் நன்னெறி தொலைநோக்கை அடிப்படையாகக் கொண்டது மதங்களிடையே உறவுகளின் மேலாண்மை என்பதை திருப்பீடம் தன் கண்ணோட்டமாகக் கொண்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஏப்ரல் 2025, 14:53