MAP

செபமாலை வழிபாட்டின் போது கர்தினால் Lazarus You Heung-sik செபமாலை வழிபாட்டின் போது கர்தினால் Lazarus You Heung-sik  (ANSA)

விரைந்து உதவும் அன்னை மரியா எதிர்நோக்கின் அடையாளம்

தவக்காலத்தின் முதல் வெள்ளியும் மாதத்தின் முதல் வெள்ளியுமாகிய மார்ச் 7 வெள்ளிக்கிழமையன்று, வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு செபமாலை வழிபாட்டில் ஏராளமான கர்தினால்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவறத்தார், உரோம் மறைமாவட்ட மக்கள் என நூற்றுக்கணக்கானோர் அன்னை மரியின் திருஉருவப்படத்திற்கு முன்பாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் நலத்திற்காக செபித்தனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

விரைந்து உதவும் குணம் கொண்ட அன்னை மரியா தனது உதவியை நாடுபவர்களுக்கு எதிர்நோக்கின் அடையாளமாக சுடர்விடுகின்றார் என்றும், தனிநபராக தனது மகன் இயேசு கிறிஸ்துவின் துன்ப மறைபொருளில் பங்கேற்ற திருஅவையின் தாயான அன்னை மரியா திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரின் வாழ்விலும் பங்கேற்கின்றார் என்றும் கூறினார் கர்தினால் Lazarus You Heung-sik

மார்ச் 7, வெள்ளிக்கிழமை மாலை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் நலத்திற்காக நடைபெற்ற 12-ஆவது நாள் சிறப்பு செபமாலை வழிபாட்டிற்குத் தலைமையேற்று வழிநடத்தியபோது இவ்வாறு எடுத்துரைத்தார் அருள்பணியாளர்களுக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் Lazarus You Heung-sik.

தவக்காலத்தின் முதல் வெள்ளியும் மாதத்தின் முதல் வெள்ளியுமாகிய மார்ச் 7 வெள்ளிக்கிழமையன்று, வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு செபமாலை வழிபாட்டில் ஏராளமான கர்தினால்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவறத்தார், உரோம் மறைமாவட்ட மக்கள் என நூற்றுக்கணக்கானோர் அன்னை மரியின் திருஉருவப்படத்திற்கு முன்பாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் நலத்திற்காக செபித்தனர்.

துயரம் நிறை மறையுண்மைகள் தியானிக்கப்பட்டு செபமாலை வழிபாடானது மிகுந்த பக்தியாக இறைமக்களால் ஏறெடுக்கப்பட்டது. செபமாலையின் இறுதியில் அன்னை மரியா மன்றாட்டு மாலை செபிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழிபாட்டின் நிறைவு செபத்தினை எடுத்துரைத்தார் கர்தினால் Lazarus.

அச்செபத்தில், நாம் அனைவரும் நம்பிக்கையில் விடாமுயற்சியுடன் இருந்து, அன்பில் வளர்ந்து, எதிர்நோக்கின் இறுதி வரை ஒன்றிணைந்து நடப்போம் என்று கூறி நிறைவுசெய்தார் கர்தினால் Lazarus.

 l’Oremus pro Pontifice என்னும் திருத்தந்தைக்கான செபம் பாடலாகப் பாடப்பட்டதைத் தொடர்ந்து கர்தினால் Lazarus அவர்களின் செப ஆசீருடன் செபமாலை வழிபாடானது நிறைவுக்கு வந்தது.

நோயுற்றோரின் நலன் என்ற பெயரைத் தாங்கியிருக்கும் அன்னை மரியா திருத்தந்தையை நலமுடன் பாதுகாப்பார் என்ற நம்பிக்கையையும்  நாம் ஒவ்வொருவரும் திருத்தந்தைக்காகச் செபிக்கும் கடமையைக் கொண்டுள்ளோம், அதேவேளை, அவர் விரும்பும் செயல்களையும் நாம் ஆற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார் கர்தினால் Lazarus .

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 மார்ச் 2025, 14:06