MAP

அருள்பணி ரொபர்த்தோ பசோலினி அருள்பணி ரொபர்த்தோ பசோலினி   (VATICAN MEDIA Divisione Foto)

நன்மை செய்வதற்கு உதவுவது கிறிஸ்தவர்களின் பொறுப்பு

நிலையான வாழ்வு நாம் வாழ்கின்ற விதத்திலும் அன்பு செலுத்துகின்ற விதத்திலும் வெளிப்படுகிறது, கடவுளின் பிரசன்னத்திற்கு நம்மைத் திறக்கிறது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கிறிஸ்தவர்களின் பொறுப்பு நன்மை செய்வது மட்டுமல்ல, மாறாக மற்றவர்கள் நன்மை செய்வதற்கு உதவுவது என்றும், நிலையான வாழ்வானது நாம் வாழ்கின்ற விதத்திலும், அன்பை வெளிப்படுத்துகின்ற விதத்திலும் வெளிப்படுகிறது, நம் உள்ளத்தை மாற்றும் கடவுளின் பிரசன்னத்திற்கு நம்மைத் திறக்கிறது என்றும் கூறினார் அருள்பணி ரொபர்த்தோ பசோலினி.

மார்ச் 10, திங்கள்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்ற தவக்காலத் தியானத்தின் இரண்டாம் பகுதியாக “நீதித் தீர்வையின் இறுதிநாள்” என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தபோது இவ்வாறு கூறினார் அருள்பணி ரொபர்த்தோ பசோலினி.

மத்தேயு நற்செய்தியில் கூறப்பட்டு, மைக்கேல் ஆஞ்சலோவின் புகழ்பெற்ற ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு என்னும் உவமையானது பிறரன்புச் செயல்களுக்கான அழைப்பாக விளக்கப்படுகிறது என்றும், இறுதித் தீர்ப்பு அல்ல மாறாக, ஒவ்வொரு நபரும் ஏற்கனவே அனுபவித்த எதார்த்தத்தை வெளிப்படுத்தும் ஓர் அறிவிப்பு என்றும் கூறினார் அருள்பணி பசோலினி.

இறையரசை அணுகுவதற்கான அளவுகோல் மதச்சார்பு அல்ல, மாறாக நற்செய்தியின் கண்ணோட்டத்தில், கிறிஸ்துவின் சீடர்களை முதன்மைப்படுத்துகின்ற பண்பு என்றும் அப்பண்பானது, மிகச்சிறிய நமது சகோதர சகோதரிகளிடத்தில் செலுத்தும் உறுதியான அன்பு என்றும் சுட்டிக்காட்டிய அருள்பணி ரொபர்த்தோ அவர்கள், கிறிஸ்தவர்களின் முதன்மையான பொறுப்பு நன்மை செய்வது அல்ல, மாறாக மற்றவர்கள் நன்மை செய்வதற்கு உதவுவதாகும் என்றும் எடுத்துரைத்தார்.

காலத்தின் முடிவில், கடவுளின் அரசு முழுமையாக வெளிப்படும், மனிதகுலத்தையும் இயற்கையையும் "புதிய வானங்களாகவும் புதிய பூமியாகவும்" மாற்றும் என்று திருஅவை மறைக்கல்வி எடுத்துரைக்கின்றது என்று கூறிய அருள்பணி ரொபர்த்தோ அவர்கள், இந்த நம்பிக்கை கிறிஸ்துவின் வாக்குறுதியில் வேரூன்றியுள்ளது என்றும், அன்பின் திட்டத்தின்படி, கடவுள் மனிதகுலத்தை அவருடைய உருவமாகவும் சாயலாகவும் மாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் வாழ அழைக்கப்படுகின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.

இயேசு நிலையான வாழ்வை ஒரு தொலைதூர, எதிர்கால எதார்த்தமாக அல்ல, மாறாக என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர் என்று அறிவித்தார் எனவும், நிலையான வாழ்வு நாம் வாழ்கின்ற விதத்திலும், அன்பை வெளிப்படுத்துகின்ற விதத்திலும் வெளிப்படுகிறது, நம் உள்ளத்தை மாற்றும் கடவுளின் பிரசன்னத்திற்கு நம்மைத் திறக்கிறது என்றும் கூறினார் அருள்பணி பசோலினி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 மார்ச் 2025, 15:25