இன்றைய உலகில் வாய்ப்புகள் பெருகுகிறது, ஓய்வின் நேரம் குறைகிறது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
முடிவற்ற வாழ்வு என்னும் கொடை நம்மிடம் ஏற்கனவே இருக்கின்றபோதிலும், அதன் அடிப்படைக் கூறைப் புரிந்துகொள்வதில் நாம் சிரமங்களை சந்தித்துவருகிறோம் என உரைத்தார் திருப்பீட உயர் அதிகாரிகளுக்கு தவக்கால ஆண்டு தியானம் வழங்கிவரும் அருள்பணி Roberto Pasolini.
திருப்பீட உயர் அதிகாரிகளுக்கு தவக்கால ஆண்டு தியானம் வழங்கிவரும் கப்புச்சின் துறவுசபை அருள்பணி பசோலினி அவர்கள், முடிவற்ற ஒரு நித்திரையில் நாம் இருப்பதுபோல் நம் வாழ்வு முடிந்துவிடுவதாக நாம் எண்ணுவது ஏமாற்றம் தரும் ஒன்றாக இருக்கும், ஏனெனில் அது இயக்கமற்ற ஒரு நிலையை குறிக்கும், மாறாக விவிலியம் காட்டும் முடிவற்ற வாழ்வு என்பது முழு நிறைவின் வடிவமாக உள்ளது என்றார்.
இயேசுவும் சிலுவையிலிருந்து இறக்கப்பட்ட பின்னர் கல்லறையில் ஓய்வெடுத்தார் என்பதைச் சுட்டிக்காட்டிய அருள்பணி பசோலினி அவர்கள், இயங்காமல் இருப்பது என்பது பயனற்றதாக இருப்பதைக் குறிக்காது, மாறாக நம்பிக்கையுடன் காலத்தையும் அரவணைப்பதை சுட்டிக்காட்டுகிறது என்றார்.
இன்றைய நவீன உலகம் நாம் எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கவேண்டும், நாம் பயனுடையவர்களாக எதையாவது உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதால், வாய்ப்புகள் பெருகும் அதேவேளை ஓய்வின் நேரம் குறைந்துகொண்டே வருகிறது என்ற அருள்பணி பசோலினி, விளைவுகள் குறித்த கவலை அதிகமாகும்போது, ஓய்வும் அமைதியும் குறைபடுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஓய்வு என்பது இயங்காமலிருப்பதைக் குறிப்பதில்லை, மாறாக, சுதந்திரத்தைக் குறிப்பதாக உள்ளது என்ற அவர், ஓய்வை வாழ்வது என்பது முடிவற்ற வாழ்வுக்கான பயிற்சியாக எடுத்துக் கொள்வதுடன், அச்சமின்றி, ஆழமாக வாழவும், கடவுள் நம்முள் செயலாற்றுகிறார் என்பதை உணர்ந்தவர்களாகச் செயல்படவும் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
உண்மையான ஓய்வு என்பது உள்மன விடுதலையைத் தருவதாகவும், வாழ்வு நமக்கு வழங்குபவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலையுடனும், கடவுள் நம்மில் செயலாற்றுகிறார் என்பதை நம்புவதாகவும் இருக்கிறது என திருப்பீட அதிகாரிகளுக்கு வழங்கிய தவக்கால ஆண்டு தியானத்தில் உரைத்தார் அருள்பணி பசோலினி.
இந்த தியானத்தில் மருத்துவமனையிலிருந்தே திருத்தந்தையும் காணொளி வழியாக பங்குபெற்று வருகிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்