வத்திக்கானில் கடைபிடிக்கப்படும் பூமி நேரம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
“நமது பொதுவான இல்லத்தைப் பாதுகாப்போம்” என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உலக பூமி நேரத்தை சிறப்பிக்கும் வகையில் ஒரு மணி நேரம் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலின் குவிமாட (dome) விளக்குகள் அணைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 22, சனிக்கிழமை ‘இயற்கைக்கான உலகளாவிய நிதியம்’ (World Wide Fund for Nature) (WWF) எனப்படும் அரசு சார்பற்ற பன்னாட்டு நிறுவனத்தாரால் சிறப்பிக்கப்படும் பூமி நேரத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 22) உரோம் உள்ளூர் நேரம் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒரு மணி நேரம் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் குவிமாட விளக்குகள் அணைக்கப்பட உள்ளன.
இயற்கை நமது வாழ்க்கையிலும், காலநிலை மாற்றத்தை சமாளிப்பதிலும் ஒரு அடிப்படை பங்கை வகிக்கிறது, நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும், இயற்கை ஈடுபட்டுள்ளது, அதனுடன் நமது இன்றைய மற்றும் எதிர்கால உடல்நலமும் பாதுகாப்பும் இணைக்கப்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில் பூமி நேரம் உலகெங்கும் சிறப்பிக்கப்பட்டு வருகின்றது.
அவ்வகையில், மார்ச் 22, சனிக்கிழமை இன்று, இத்தாலியில் சிறப்பிக்கப்படும் இப்பூமி நேரம், காலநிலை சவாலை சமாளிக்கவும், இயற்கையின் மீதான நமது உரிமையை திரும்பப் பெறவும், பூமி முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் எல்லையற்ற நிகழ்வு என்பதை வலியுறுத்தியும் சிறப்பிக்கப்படுகின்றது.
இயற்கையைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட WWF என்ற இந்நிறுவனம், உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1300-க்கும் மேற்பட்ட இயற்கைப் பாதுகாப்புத் திட்டங்களுக்குப் பங்களிப்பு செய்து வருகின்றது. மேலும் இந்நிறுவனத்திற்கு 50 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உதவித் தொகை வழங்கி வருகின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்