MAP

ஹிரோஷிமா நாகசாகி நினைவிடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் (19.11.2019) ஹிரோஷிமா நாகசாகி நினைவிடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் (19.11.2019)   (Vatican Media)

ஆயுதங்களுடன் ஒருவர் மற்றவரை அன்பு செய்ய முடியாது

வறுமைக்கு எதிரான போராட்டம், அமைதியை மேம்படுத்துதல், கல்வி, சுற்றுச்சூழல், நலவாழ்வுத் திட்டங்களை உணர்ந்துகொள்வது மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் போன்றவை அவசியம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

மிகவும் நியாயமான மற்றும் பாதுகாப்பான சமூகத்தை நாம் உருவாக்க விரும்பினால், ஆயுதங்கள் நம் கைகளிலிருந்து கீழே விழ நாம் அனுமதிக்க வேண்டும் என்றும், ஒருவரின் கையில் இருக்கும் ஆயுதங்களுடன் ஒருவர் மற்றவரை அன்பு செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார் முனைவர் அந்திரேயா தொர்னியெல்லி.

மார்ச் 15, சனிக்கிழமை ஆயுதமயமாக்கல், அணு ஆயுதம் என்ற கருத்தில் தனது கருத்துக்களை  வத்திக்கான் செய்திகளின் ஆசிரியர் பக்கத்தில் வெளியிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அணுஆயுதம் குறித்து கூறிய கருத்துக்களை நினைவுகூர்ந்துள்ளார், திருப்பீடச் சமூகத்தொடர்புத் துறையின் செய்திப் பிரிவுத் தலைவர் முனைவர் அந்திரேயா தொர்னியெல்லி

போர்க்காற்றானது, பெரிய முதலீடுகளைப் பயன்படுத்தி மறு ஆயுதமயமாக்கலையும், அணு ஆயுதங்களை புதுப்பிப்பதற்கான திட்டங்களையும் உருவாக்குகின்றது என்றும், ஐரோப்பாவிலும் உலகிலும், ஆயுதப் போட்டி ஒரு தவிர்க்க முடியாத அவசியமான வாய்ப்பு என்பதை முன்வைக்கின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார் தொர்னியெல்லி.

அரசு தரப்பிலான பேச்சுவார்த்தைகள் அமைதி அடைந்தததைப் போலவும், உரையாடல் வழிமுறைகள் திறன் அற்றவைகள் போன்றும் எடுத்துரைக்கப்பட்டு ஆயுதமாக்கல்  ஒன்றே ஒரே வழி என்பது போல சுட்டிக்காட்டப்படுகின்றது என்றும் எடுத்துரைத்துள்ள தொர்னியெல்லி அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2017 –ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அணுஆயுதம் குறித்து எடுத்துரைத்த கருத்துக்களான, "ஆயுதப் பந்தயத்தின் சுழலுக்கு ஓய்வு இல்லை, அணு ஆயுதங்களை நவீனமயமாக்குதல் மற்றும் மேம்படுத்துவதற்கான செலவுகள், நாடுகளுக்கான செலவினப் பொருளைக் குறிக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வறுமைக்கு எதிரான போராட்டம், அமைதியை மேம்படுத்துதல், கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத் திட்டங்களை உணர்ந்துகொள்ளுதல், மனித உரிமைகளை மேம்படுத்துதல் போன்றவை அவசியம் என்றும், மனிதகுலத்தின் அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் நியாயமற்றவை என்றும் எடுத்துரைத்த தொர்னியெல்லி அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கூட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து அமைதிக்காகக் குரல் கொடுத்து வருகின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வலியுறுத்திய கருத்துக்களான, “மனித இதயத்தின் ஆழமான விருப்பங்களில் ஒன்று, அமைதி மற்றும் நிலைத்த தன்மைக்கான விருப்பம் என்றும், அணு மற்றும் பிற பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பது இந்த விருப்பத்திற்கு சிறந்த பதில் அல்ல" என்பதையும் நினைவுகூர்ந்துள்ளார்.

ஆயுதங்களுக்கு நம்மை ஒப்படைத்து, உரையாடலைத் தவிர்க்கும்போது, ​​ஆயுதங்கள், உயிரிழப்புகளையும் அழிவையும் ஏற்படுத்துவதற்கு முன்பே, தீய கனவுகளை உருவாக்கும் திறன் கொண்டவை என்பதை நாம் மறந்துவிடுகிறோம் என்றும், ஆயுதங்கள் அதிகப்படியான செலவை ஏற்படுத்துகின்றன, ஒன்றிப்பையும் பயனுள்ள பணிகளையும் தடுக்கின்றன, மக்களின் உளவியலை சிதைக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார் தொர்னியெல்லி.

அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் கூற்றுப்படி, ஐரோப்பாவில் 290 அணு ஆயுதங்கள் பிரெஞ்சு கட்டுப்பாட்டிலும், 225 போர்க்கப்பல்கள் பிரிட்டன் கட்டுப்பாடிலும் உள்ளன என்றும், ஏறக்குறைய அனைத்து அணு ஆயுதங்களும் அதாவது, 88 விழுக்காடு அணு ஆயுதங்கள், அமெரிக்கா மற்றும் இரஷ்யாவின் ஆயுதக் கிடங்குகளில் ஏறக்குறைய 5,000 க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார் தொர்னியெல்லி.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளவற்றைத் தவிர மொத்தம் 9 நாடுகளில் அணு குண்டுகள் உள்ளன என்றும், இவைகள் 1945 -ஆம் ஆண்டு ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் வீசப்பட்ட குண்டுகளை விட ஆயிரம் மடங்கு அதிக அழிவு சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்ட ஏவுகணைகள் என்றும் எடுத்துரைத்தார்.

"கத்தோலிக்க திருஅவையானது, மக்கள் மற்றும் நாடுகளிடையே அமைதியை வளர்ப்பதற்கான முடிவில் மாற்ற முடியாத அளவிற்கு உறுதியாக உள்ளது என்றும், கடவுளுக்கு முன்பாகவும், இந்த பூமியின் அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் முன்பாகவும் அமைதிக்காக உழைக்க கடமைப்பட்டிருப்பதாக உணருகின்றது" என்று ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நாகசாகி திருத்தூதுப்பயணத்தின் போது வலியுறுத்தியக் கருத்துக்களையும் நினைவுகூர்ந்துள்ளார் தொர்னியெல்லி.

"அணு ஆயுதங்கள் இல்லாத உலகம், சாத்தியமானது மற்றும் அவசியமானது" என்ற உறுதியில் வளர அரசியல் தலைவர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தியதையும், "நம் காலத்தின் தேசிய மற்றும் பன்னாட்டு பாதுகாப்பிற்கு, அணு ஆயுதங்கள் நம்மை அச்சுருத்தல்களிலிருந்து பாதுகாக்காது என்பதை மறந்துவிடக் கூடாது" என்று சுட்டிக்காட்டியதையும் எடுத்துரைத்துள்ளார் அந்திரேயா தொர்னியெல்லி

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 மார்ச் 2025, 15:22