இஸ்லாமியர்களுக்கு திருப்பீடத்தின் இரமதான் வாழ்த்துச் செய்தி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இரமதான் மாதத்தில் இடம்பெறும் உண்ணா நோன்பு, செபம் மற்றும் பிறருடன் பகிர்தல் என்பவை கடவுளுடன் நெருங்கி வருவதற்கும், மதத்தின் அடிப்படை மதிப்பீடுகளான கருணை மற்றும் ஒருமைப்பாட்டை புதுப்பிப்பதற்கும் ஒரு நல்ல வாய்ப்பு என திருப்பீடம் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளது.
இரமதான் மாத துவக்கத்திற்கும் அதன் இறுதியில் சிறப்பிக்கப்படும் EID Al-FITR விழாவுக்குமென மதங்களிடையே உரையாடலுக்கான திருப்பீடத்துறை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கிறிஸ்தவர்களின் தவக்காலமும் இஸ்லாமியர்களின் இரமதான் மாதமும் இணைந்து வருவதால், இவ்விரு மதத்தினரும் புனிதப்படுத்தல்கள், ஜெபம் மற்றும் பிறரன்பில் அருகருகே நடைபோடுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என தெரிவிக்கிறது.
இவ்வுலகின் திருப்பயணிகளாக இருக்கும் நாம் அனைவரும் நல்லதொரு வாழ்வை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறோம் எனக்கூறும் திருப்பீடத்தின் செய்தி, இவ்வுலகில் நம்பிக்கையைத் தேடுவதாக நம் வாழ்வு இருந்து, மனித குலத்துடன் இறைவன் கொண்டிருக்கும் நட்புணர்வுக்கு ஒன்றிணைந்த சான்றுகளாக இருமதத்தினரும் இருப்போம் எனவும் தெரிவிக்கிறது.
இரமதான் மாதத்தில் உண்ணா நோன்பு, ஜெபம் மற்றும் பிறரன்பு நடவடிக்கைள் இஸ்லாமியர்களால் மேற்கொள்ளப்படுவதுபோல், கத்தோலிக்கத்திலும் தவக்காலத்தில் கடைபிடிக்கப்படுகிறது என்பதை அச்செய்தியில் கூறும் மதங்களிடையே கலந்துரையாடலுக்கான திருப்பீடத்துறை, விசுவாசம் என்பது உள்மனமாற்றத்தின் பாதை எனவும் குறிப்பிடுகிறது.
உடன்பிறந்த உறவு நிலை, மனம் திறந்த கலந்துரையாடல்கள் போன்றவைகளுக்காக இரு மதத்தினரும் உழைக்க வேண்டியதன் அவசியம், வன்முறைகள், பாகுபாடுகள், ஒதுக்கிவைத்தல் ஆகியவைகளைக் கைவிட்டு, ஒன்றிப்பு மற்றும் ஒப்புரவிற்காக ஒன்றிணந்து உழைக்க முடியும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது இந்த வாழ்த்துச் செய்தி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்