MAP

திருப்பலியின்போது ஆயர் CLAUDIO GIULIODORI திருப்பலியின்போது ஆயர் CLAUDIO GIULIODORI  (ANSA)

எதிர்நோக்கின் திருப்பயணத்தில் நம்மை வழிநடத்தும் இறைவார்த்தை

உண்மையான நல்வாழ்வு இதயத்திலிருந்து உருவாகிறது, உண்மையான மகிழ்ச்சியை உருவாக்குகிறது என்றும், குழந்தைகளுக்குரிய எளிமை மற்றும் தன்னிச்சையான தன்மைக்குத் திரும்புவதன் வழியாக அதனை நாம் அனுபவிக்க முடியும் - ஆயர் CLAUDIO GIULIODORI.

மெரினா ராஜ் - வத்திக்கான்

எதிர்நோக்கில் நிலைத்திருக்கவும், நமது குடும்பங்களில் அதனை வளர்க்கவும், வாழ்வில் சோர்வடைந்து இருப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் நாம் அழைக்கப்படுகின்றோம் என்றும், இறைவார்த்தை நம்மை எதிர்நோக்கின் திருப்பயணத்தில் வழிநடத்துகின்றது என்றும் கூறினார் ஆயர் CLAUDIO GIULIODORI.

அருள்பணி அகொஸ்தீனோ ஜெமெல்லி அவர்களால் துவக்கப்பட்ட திருஇதய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதன் யூபிலி ஆண்டை முன்னிட்டு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் மார்ச் 1, சனிக்கிழமை காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கியபோது இவ்வாறு எடுத்துரைத்தார் ஆயர் CLAUDIO GIULIODORI.

ஜெமெல்லி திருஇருதய பல்கலைக்கழகத்தின் திருஅவைசார் பொது உதவியாளரான ஆயர் CLAUDIO GIULIODORI அவர்கள், சிறு பிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல் என்ற மாற்கு நற்செய்தியின் இன்றைய நாள் வாசகத்தைக் குறித்து எடுத்துரைத்து, எதிர்நோக்கு சிறு பிள்ளைகளின் முகத்தைக் கொண்டுள்ளது, அவர்களது மென்மையால் ஊட்டம் பெறுகின்றது என்றும் கூறினார்.

உண்மையான நல்வாழ்வு இதயத்திலிருந்து உருவாகிறது, உண்மையான மகிழ்ச்சியை உருவாக்குகிறது என்றும், குழந்தைகளுக்குரிய எளிமை மற்றும் தன்னிச்சையான தன்மைக்குத் திரும்புவதன் வழியாக அதனை நாம் அனுபவிக்க முடியும் என்றும் எடுத்துரைத்தார் ஆயர் CLAUDIO GIULIODORI.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் யூபிலி ஆணைமடலில் வலியுறுத்துவது போல, நான் அன்பு செய்யப்படுகின்றேன், நான் இருக்கின்றேன், ஏமாற்றமடையாத, எதனாலும் யாராலும் பிரிக்க முடியாத அன்பில் நான் என்றென்றும் இருக்கின்றேன் என்ற வார்த்தைகளுக்கேற்ப அன்பில், உறுதியாக நிறைவேறும் ஒரு மகிழ்ச்சி நமக்குத் தேவை என்றும் எடுத்துரைத்தார் ஆயர் GIULIODORI.

ஒவ்வொரு மனித வாழ்க்கையின் மகத்தான மாண்பையும், மதிப்பையும் இழக்காமல் இருக்கும் விழிப்புணர்வு தேவை என்றும், அறிவாலும் கூர்மதியாலும் நிரப்பப்பட்டவர்களாகவும் நன்மை தீமையை கண்டறிபவர்களாகவும் இருக்க சீராக்கின் ஞான நூல் நமக்கு அழைப்பு விடுப்பதாக எடுத்துரைத்த ஆயர் GIULIODORI அவர்கள், இளையோர் நன்மை, தீமையைப் பகுத்தறிந்து வாழ வலியுறுத்தும் பணி எளிதானதோ சாதாரணமானதோ அல்ல என்றும் கூறினார்.

யூபிலி என்பது நமது வாழ்க்கையின் சரியான அளவை மீண்டும் கண்டுபிடிப்பதற்கும், எல்லாவற்றின் உண்மையின் ஈர்ப்பு மையமான இயேசு கிறிஸ்துவை மீண்டும் கண்டுபிடிப்பதற்கும் உகந்த இரக்கத்தின் நேரம் என்றும், எல்லாம் வல்லவரின் ஆற்றலை உணரவும், மனிதன் அவமதிக்கப்படுவதைத் தவிர்க்கவும் உதவும் காலம் என்றும் சுட்டிக்காட்டினார் ஆயர் CLAUDIO GIULIODORI.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 மார்ச் 2025, 13:14