MAP

இந்தோனேசிய கோவில் முன்பு இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் இந்தோனேசிய கோவில் முன்பு இஸ்லாமியரும் கிறிஸ்தவரும்  (AFP or licensors)

இந்தோனேசியா-வத்திக்கான் இடையே அரசியல் உறவின் 75 ஆண்டுகள்

இறைவனில் நம்பிக்கையையும் பன்மையில் ஒருமையையும் உள்ளடக்கிய இந்தோனேசியாவின் பஞ்சசீலா கொள்கையும், மனிதர்கள் சமமானவர்கள், கலாச்சார பன்மை, சகோதரத்துவம் போன்றவையும் கிறிஸ்தவ மதிப்பீடுகளுடன் இணைந்து செல்பவை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கடந்த 75 ஆண்டுகளாக தங்களிடையே அரசியல் உறவை கொண்டிருக்கும் இந்தோனேசியாவும் வத்திக்கானும் அதனை மேலும் பலப்படுத்த ஆவல் கொள்வதாக திருப்பீடத்திற்கான இந்தோனேசிய தூதுவர் தெரிவித்தார்.

1950ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி இந்தோனேசியாவிற்கும் வத்திக்கானுக்கும் இடையே அரசியல் உறவு உருவாக்கப்பட்டதன் 75ஆம் ஆண்டு நிறைவு குறித்து பிதெஸ் செய்தி நிறுவனத்திற்கு நேர்முகம் வழங்கிய திருப்பீடத்திற்கான இந்தோனேசிய தூதுவர் Michael Trias Kuncahyono அவர்கள், டச்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற ஐந்து ஆண்டுகளிலேயே திருப்பீடத்திற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே அரசியல் உறவு உருவாக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டார்.

இந்தோனேசியாவின் மண்ணின் மைந்தரான முதல் ஆயர் Albertus Sugiyopranoto அவர்களின் முயற்சியின் பேரிலேயே இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் உறவு உருவாக்கப்பட்டதாகவும், இந்தோனேசியாவை தனி நாடாக வத்திக்கான் அங்கீகரிக்கத் தொடங்கிய பின்னரே ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இதற்கு முன் வந்தன எனவும் மேலும் கூறினார் இந்தோனேசிய தூதுவர் Kuncahyono.  

இறைவனில் நம்பிக்கையையும் பன்மையில் ஒருமையையும் உள்ளடக்கிய இந்தோனேசியாவின் பஞ்சசீலா கொள்கையைக் குறித்தும் எடுத்துரைத்த தூதுவர், இந்தோனேசியாவில் கடைபிடிக்கப்படும், மனிதர்கள் சமமானவர்கள், கலாச்சார பன்மை, சகோதரத்துவம் போன்றவை கிறிஸ்தவ மதிப்பீடுகளுடன் இணைந்து செல்பவை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

சரிநிகர் தன்மை, சுதந்திரம், ஜனநாயகம், மற்றும் அமைதிக்காக உழைப்பதில் வத்திக்கானும் இந்தோனேசியாவும் ஒரே கோட்டில் இருக்கின்றன என்பதையும் எடுத்தியம்பினார் வத்திக்கானுக்கான இந்தோனேசியாவின் தூதுவர் Kuncahyono.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 மார்ச் 2025, 12:07