MAP

பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர். பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர். 

அன்பில் நம்பிக்கைக் கொள்ளும் இறைத்தந்தை

காணாமல்போன மகன் உவமையில் இடம்பேறும் இளையமகன் போல நாம் சொத்துக்களை வீணாக்குபவர்களாகவும், மூத்தமகன் போல மனக்கசப்புடன் வாழ்பவர்களாகவும் இருக்கின்றோம்

மெரினா ராஜ் - வத்திக்கான்

அன்பு ஒன்றே நாம் இறைத்தந்தையின் இல்லத்திற்குத் திரும்புவதற்கான உண்மையான வழி என்பதை அறிந்த தந்தை அதே அன்போடு தனது மகனைச் சந்திக்க ஓடுகிறார் என்றும், தனது பிள்ளைகளின் வார்த்தைகள், முடிவுகள் மற்றும் செயல்களை விட அவர்கள் மீதான அன்பில் நம்பிக்கைக் கொள்கின்றார் என்றும் எடுத்துரைத்தார் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

மார்ச் 30, ஞாயிற்றுக்கிழமை ஹங்கேரியின் புடாபெஸ்டில் உள்ள தூய ஸ்தேவான் பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலிக்குத் தலைமையேற்று உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

காணாமல்போன மகன் உவமையில் இடம்பெறும் இளையமகன் போல நாம் சொத்துக்களை வீணாக்குபவர்களாகவும், மூத்தமகன் போல மனக்கசப்புடன் வாழ்பவர்களாகவும் இருக்கின்றோம் என்று எடுத்துரைத்தார் பேராயர் காலகர்.

தந்தையிடமிருந்து தொலைதூரத்திற்கு கொண்டு செல்லும் செயல்கள்

துயரம், வருத்தம், இழப்பு போன்றவையும் பயம், வெட்கம், அவமானம் போன்றவையும் நாமிருக்கும் இடத்திலிருந்து நம்மை தொலைதூரத்திற்குக் கொண்டு செல்கின்றது என்றும், சிலர் போதை மற்றும் தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் செயல்கள் வழியாக இறைத்தந்தையின் இல்லத்திலிருந்து தொலைதூரம் செல்கின்றார்கள் என்றும் கூறினார் பேராயர் காலகர்.

இறைத்தந்தையை விட்டு நாம் செல்லும் தொலைதூர நாட்டில், நம்மையே இழந்து பசி, இழப்பு, மற்றும் இறப்பிற்கு ஆளாகின்றோம் என்றும், நம்மை இழந்து, அர்த்தமற்றவர்களாக, வாழ்க்கை, அன்பு மற்றும் நம்பிக்கைக்காக காத்துக்கொண்டிருக்கின்றோம் என்றும் எடுத்துரைத்தார் பேராயர் காலகர்.

இல்லம் திரும்புவதற்கான வழி அன்பு

அன்பு ஒன்றே நாம் இறைத்தந்தையின் இல்லத்திற்குத் திரும்புவதற்கான உண்மையான வழி என்பதை அறிந்த தந்தை அதே அன்போடு தனது மகனைச் சந்திக்க ஓடுகிறார் என்றும், ஊரையும் தந்தையையும் அவமரியாதைக்குட்படுத்திய இளையமகனை, கிராம மக்களிடமிருந்து காக்கவும், அவரைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வரவும் தந்தை முன்வருகின்றார் என்றும் கூறினார்.

சிறந்த உடை, காலணி, மோதிரம் போன்றவற்றை அவனுக்கு வழங்கி, தன்னிடம் திரும்பி வந்த இளையமகனை அன்பு செய்கின்றார் என்றும்,  தன்னை விட்டு தொலைதூரம் சென்ற மகனுக்காகத் தன்னையே அர்ப்பணிக்கின்றார் என்றும் எடுத்துரைத்தார்.

வீட்டை விட்டுச் செல்ல நினைக்கின்றோமா? தந்தை நமக்கு முழு சுதந்திரம் கொடுக்கின்றார், அன்பு செய்கின்றார். பன்றிகளை மேய்க்கும் இடத்தில் வாழ்கின்றோமா? அப்போதும் தந்தை நம்மை அன்பு செய்கின்றார். நமது வருகைக்காகப் பொறுமையுடன் காத்திருக்கின்றார். வீட்டிற்குத் திரும்பி வருகின்றோமா? அப்போதும் நம்மை அன்பு செய்கின்றார், மகனுக்குரிய அடையாளத்தை அளித்துப் பாதுகாக்கின்றார் என்று கூறிய பேராயர் அவர்கள், எல்லா நிலைகளிலும் தந்தை நம்மை அன்பு செய்கின்றார் என்று கூறினார்.

நமது இல்லத்தில் இருக்கும்போது நமக்காக அன்புடன் விருந்து தயாரிக்கின்றார், நமது பயணத்தில் நாம் எங்கிருந்தாலும் பிள்ளைகளாகிய நம்மேல் கொண்ட அன்பில் அவர் உறுதியாக இருக்கின்றார் என்றும் தனது பிள்ளைகளின் வார்த்தைகள் முடிவுகள் மற்றும் செயல்களை விட அவர்கள் மீதான அன்பில் நம்பிக்கைக் கொள்கின்றார் என்றும் எடுத்துரைத்தார் பேராயர் காலகர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 மார்ச் 2025, 14:54