ஒருங்கிணைந்தப் பயணப் பாதையில் நடக்க உதவும் ஒரு பாதை
மெரினா ராஜ் – வத்திக்கான்
2028 –ஆம் ஆண்டில் நடைபெற உள்ள திருஅவைக் கூட்டமானது, திருஅவையின் எல்லா நிலையிலும் வளர்ச்சியடைந்த அனைத்து பலன்களையும் அறுவடை செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும், அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்தப் பயணப் பாதையில் நடக்க உதவும் ஒரு பாதை என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் மாரியோ கிரேக்.
மார்ச் 15, சனிக்கிழமை ஒருங்கிணைந்த ஆயர் பேரவையின் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து ஆயர் மாமன்ற பொதுச்செயலகம் வெளியிட்டக் கடிதம் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு அளித்துள்ள நேர்காணலில் இவ்வாறு தெரிவித்தார் உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொது செயலாளர் கர்தினால் மாரியோ கிரேக்.
ஆயர் மாமன்றத்தின் பொதுச் செயலகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட, நடைமுறைப்படுத்துதல் கட்டத்தின் துணை மதிப்பீட்டு செயல்முறையை வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய கர்தினால் கிரேக் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் இது அங்கீகரிக்கப்பட்டது என்றும், இதனை அனைத்து தலத்திருஅவைகளுக்கும் பகிர வேண்டும் என்றும் திருத்தந்தை வலியுறுத்துவதாகவும் எடுத்துரைத்தார்.
ஒன்றிப்பு, பங்கேற்பு, பணி என்ற உலக ஆயர்கள் மாமன்றத்தின் பலன்களை நடைமுறைப்படுத்துதல் குறித்து தலத்திருஅவைகளுக்கு ஆயர் செயலகம் முன்வைக்கும் பாதையின் பொருளானது பணிகளுக்கு மேல் பணியைக் கொடுப்பதல்ல, மாறாக தலத்திருஅவைகள் ஒருங்கிணைந்த பயணப் பாதையில் நடக்க உதவுவது என்று வலியுறுத்தினார் கர்தினால் கிரேக்.
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற 16-ஆவது உலக ஆயர் மாமன்றத்தின் இரண்டாம் பகுதியோடு, ஒருங்கிணைந்த ஆயர் மாமன்றம் நிறைவுற்றது என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று எடுத்துரைத்த கர்தினால் கிரேக் அவர்கள், ஆனால் உண்மையில் தயாரிப்பு, கொண்டாட்டம், நடைமுறை என்னும் மூன்று கட்டங்களாக அது பிரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய செயல்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான பல குறிப்பிடத்தக்க கூட்டங்கள் 2028 -ஆம் ஆண்டு உரோமில் நடைபெறும் ஒரு கூட்டத்துடன் நிறைவடையும் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் கிரேக்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்