விசுவாசத்திற்கும் பிறரன்பிற்கும் இடையேயான தொடர்பை புரிந்துகொள்தல
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இயேசு வாழ்ந்த புனித பூமி பகுதிக்கென ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தில் புனித வெள்ளிக்கிழமையன்று திரட்டப்படும் நிதிக்கு தராள மனதுடன் வழங்குமாறு கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் கர்தினால் கிளவுதியோ குகரோத்தி.
கீழை வழிபாட்டுமுறைகளுக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் குகரோத்தி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், இயேசுவின் உயிர்ப்பு விழாவுக்காக நாம் ஆன்மீக முறையில் நம்மையே தயாரித்துவரும் இவ்வேளையில், விசுவாசத்திற்கும் பிறரன்பிற்கும் இடையேயுள்ள உயிர்துடிப்பான தொடர்பைப் புரிந்துகொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
மார்ச் 17 திங்கள்கிழமையன்று உலகின் அனைத்து ஆயர்களுக்கும் இந்த புனித வெள்ளி நிதி திரட்டல் குறித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள கர்தினால் குகரோத்தி அவர்கள், துன்புறும் மக்களின் அழுகுரல்களுக்கு செவிமடுத்து தாராள நிதியை வழங்க விசுவாசிகளைத் தூண்டுமாறு திருத்தந்தையின் பெயரால் ஆயர்களை விண்ணப்பிப்பதாக அதில் கூறியுள்ளார்.
புனித பூமியில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு அகில உலக திருஅவையின் உதவி பெருமளவில் தேவைப்படுவதாக உரைக்கும் கர்தினால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி மத்தியக் கிழக்கு கத்தோலிக்கர்களுக்கு திருத்தந்தை அனுப்பிய கடிதத்தின் முக்கியக் கருத்துக்களையும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
புனித பூமியின் கிறிஸ்தவர்களை இருள் சூழ்ந்துள்ளதால் விசுவாசத்தின் ஒளியை உயிர்துடிப்புடையதாக வைப்பதுடன், இந்த பகைமை நிறைந்த உலகில் அன்பு மற்றும் ஒற்றுமையின் சான்றுகளாக விளங்கவேண்டும் என திருத்தந்தை தன் கடிதத்தில் கூறியுள்ளதையும் தன் செய்தியில் மேற்கோள் காட்டியுள்ளார் கர்தினால் குகரோத்தி.
குழந்தைகளுக்கு கல்வி நிலையங்களை மீண்டும் கட்டியெழுப்பி அவர்களின் கல்வியைத் தொடர உதவுவது, சுற்றுலாப் பயணிகளின் வரவு குறைவால் இடம்பெற்ற பொருளாதார இழப்புக்களை ஈடு செய்தல் போன்றவைகளையும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் கர்தினால்.
புனிதபூமிப் பகுதியில் சிறப்புப் பணிகளை ஆற்றிவரும் பிரான்சிஸ்கன் துறவுசபையினருக்கும் தன் நன்றியையும் வெளியிட்டுள்ளார் கீழை வழிபாட்டுமுறைகளுக்கான திருப்பீடத் துறையின் தலைவர், கர்தினால் குகரோத்தி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்